< Back
மாநில செய்திகள்
ஒரே ஆண்டில் 2வது முறையாக நிரம்பும் வைகை அணை; முழுக்கொள்ளளவை எட்டியதால் வெள்ள அபாய எச்சரிக்கை

68.50 அடியில் கடல் போல காட்சியளிக்கும் வைகை அணை

மாநில செய்திகள்

ஒரே ஆண்டில் 2வது முறையாக நிரம்பும் வைகை அணை; முழுக்கொள்ளளவை எட்டியதால் வெள்ள அபாய எச்சரிக்கை

தினத்தந்தி
|
16 Oct 2022 2:28 PM IST

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒரே ஆண்டில் 2வது முறையாக வைகை அணை அதன் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது.

தேனி:

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முழுக்கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அணையில் இருந்து மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக மற்றும் ஒரு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்ததால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் பாசனத்திற்கு திறக்கப்பட்டதுடன் உபரிநீரும் ஆற்றில் திறக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 2வாரங்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை எதுவும் பெய்யாத நிலையில் தண்ணீர் திறப்பதும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனையடுத்து வைகை அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

இதன்காரணமாக கடந்த சில நாட்களாக படிப்படியாக சரிந்த வைகை அணை நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கியது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் இன்று காலை 68.50 அடியாக எட்டியதை தொடர்ந்து தேனி, மதுரை,திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைகை அணைக்கு வினாடிக்கு 2,094 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், அணையின் முழுக்கொள்ளளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 69 அடியை மாலைக்குள் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணை நீர்மட்டம் 69அடியை எட்டியவுடன் இறுதி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக திறக்கப்படும்.

வைகை அணை நீர்மட்டம் ஒரே ஆண்டில் 2வது முறையாக நிரம்புவதால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மேலும் செய்திகள்