அரியலூர்
வைத்தியநாதசுவாமி கோவில் வளாகத்தில் இருந்த மரங்களில் தேங்காய் பறிப்பு; சரக்கு வாகனம் சிறைபிடிப்பு
|குத்தகை காலம் முடிவடைந்த நிலையில் வைத்தியநாதசுவாமி கோவில் வளாகத்தில் இருந்த மரங்களில் தேங்காயை பறித்து சரக்கு வாகனத்தை ஏற்றி செல்ல முயன்றனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் சரக்கு வாகனத்தை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வைத்தியநாதசுவாமி கோவில்
அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் பிரசித்தி பெற்ற வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலின் உள்ளே 300-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. இந்த மரங்களை ஆண்டுதோறும் குத்தகைக்கு விட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு கோவிலின் அன்றாட செலவினங்களுக்கு பயன்படுத்தி வருவது வழக்கம்.
திருமழபாடியை சேர்ந்த கார்த்திக் என்பவர் கடந்த ஆண்டு ரூ.79 ஆயிரத்துக்கு குத்தகைக்கு எடுத்துள்ளார். அவரது குத்தகை காலம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்துள்ளது. இந்தநிலையில், குத்தகை காலம் முடிவடைந்த நிலையில் கோவில் வளாகத்தில் உள்ள மரங்களில் இருந்து தேங்காய்களை கூலி ஆட்களை கொண்டு பறித்து வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.
சரக்கு வாகனம் சிறைபிடிப்பு
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் தேங்காயை ஏற்றி செல்ல வந்த சரக்கு வாகனத்தை சிறைபிடித்தனர். பின்னர் கோவில் அறங்காவலர் மணிவேலிடம் புகார் தெரிவித்தனர். அப்போது தேங்காய் பறிப்பது தனக்கு தெரியாது என கூறியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோவிலுக்கு உள்ளேயே செயல் அலுவலர் அலுவலகம் இருக்கும்போது தேங்காய் பறிப்பது எப்படி தெரியாது என கூறலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருமானூர் சப்-இன்ஸ்பெக்டர் பூமிவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது தென்னை மரங்களுக்கான குத்தகை முடிவடைந்த நிலையில் ஏற்கனவே குத்தகை எடுத்து இருந்த கார்த்திக் தேங்காய்களை பறித்தது சட்ட விரோதமானது. எனவே தென்னை மரங்களை குத்தகைக்கு விடுவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். அதுவரை மரங்களிலிருந்து பறிக்கப்பட்ட தேங்காய்களை யாரும் எடுத்து செல்லக்கூடாது என தெரிவித்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதையடுத்து தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.