< Back
மாநில செய்திகள்
வாகைகுளம் அய்யனார் கருப்பசாமி கோவில் திருவிழா: சிலை தயாரிக்கும் பணிகள் மும்முரம்
மதுரை
மாநில செய்திகள்

வாகைகுளம் அய்யனார் கருப்பசாமி கோவில் திருவிழா: சிலை தயாரிக்கும் பணிகள் மும்முரம்

தினத்தந்தி
|
18 Sept 2023 6:40 AM IST

வாகைகுளம் அய்யனார் கருப்பசாமி கோவில் திருவிழாவையொட்டி சிலை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

திருமங்கலம்,

வாகைகுளம் அய்யனார் கருப்பசாமி கோவில் திருவிழாவையொட்டி சிலை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

கருப்பசாமி கோவில் திருவிழா

திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட வாகைகுளம் கிராமத்தில் அய்யனார் கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி பொங்கலை முன்னிட்டு அய்யனார் கருப்பசாமி கோவில் திருவிழா நடைபெறும். பொங்கல் திருவிழாவையொட்டி சிலை எடுக்கும் நிகழ்வு நடைபெறும். சிலை எடுக்கும் திருவிழாவிற்கு முன்னதாக நேர்த்திக்கடன் நேர்ந்து கொண்ட பக்தர்கள் தாங்கள் விரும்பிய காரியம் நிறைவேறியவுடன், அதற்கு பரிகாரமாக அய்யனார் சுவாமிக்கு சிலை செய்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

தாங்கள் விரும்பிய வேலை கிடைத்தாலோ அல்லது உடல் நலம் சரியானாலோ அதற்கேற்றார் போல் களிமண் உருவம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். சிலை செய்வதற்கு அங்குள்ள சிற்பக் கலைஞரிடம் முன்கூட்டியே தகவல் தெரிவிப்பார்கள்.

சிலை தயாரிக்கும் பணி மும்முரம்

இது குறித்து சிலை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள அண்ணாமலை, அருள்முருகன் கூறியதாவது:-

எங்கள் முன்னோர் காலத்தில் இருந்து அய்யனார் கருப்பசாமி கோவில் பொங்கல் திருவிழாவிற்காக சிலை செய்யும் பணிகளை செய்து வருகிறோம். எங்களது கிராமத்து மண்ணில் மட்டுமே இந்த சிலை செய்யமுடியும். வேறு பகுதியில் உள்ள குளத்திலோ கண்மாயிலோ மண் எடுத்து வந்து செய்தால் சிலையின் வடிவம் வருவதில்லை. அதனால் வாகைகுளம் கண்மாய் மண் கொண்டே சாமி சிலை உள்ளிட்ட அனைத்து சிலைகளையும் செய்து வருகிறோம். இந்த ஆண்டு பொங்கல் திருவிழா அக்டோபர் மாதம் 10, 11-ந்தேதிகளில் வருகிறது. இதில் 11-ந் தேதி சிலை எடுப்புதிருவிழா நடைபெற உள்ளது. இதற்காக பக்தர்கள் தற்போது விரதம் இருக்க தொடங்கியுள்ளனர்.

மதுரை மாவட்டம் மட்டுமின்றி பிறமாவட்டங்களான தேனி, திண்டுக்கல், விருதுநகர், சேலம், திருச்சி, சென்னை, நெல்லை உள்ளிட்ட அனைத்து பகுதியிலிருந்தும் பக்தர்கள் தங்களது வேண்டுதலாக சிலைகள் செய்ய எங்களிடம் ஆர்டர் கொடுத்து சென்றுள்ளனர். இதனால் இரவு பகலாக சிலை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்