வடபழனி முருகன் கோவில் நவராத்திரி திருவிழா: கருமாரி அம்மன் அலங்காரத்தில் கொலு ஏற்பாடு
|வடபழனி முருகன் கோவில் நவராத்திரி திருவிழாவின் 6-ம் நாள் நிகழ்வு நேற்று கொண்டாடப்பட்டது.
சென்னையில் உள்ள புகழ்பெற்ற வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி கோவில் வளாகத்தில் 'சக்தி கொலு' என்ற பெயரில் 9 படிகள் கொண்ட பிரமாண்ட கொலு வைக்கப்பட்டு உள்ளது. சக்தி கொலுவில் இதுவரை மீனாட்சி அன்னபூரணி அபிராமி கஜலட்சுமி அலங்காரங்களில் வழிபாடு நடத்தப்பட்டு இருக்கிறது.
இந்தநிலையில் நவராத்திரி திருவிழாவின் 6-ம் நாள் நிகழ்வு நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி நேற்று காலையும் மாலையும் சிறப்பு பூஜை தீபாராதனை நடந்தது. மாலை லலிதா சகஸ்ரநாம பாராயணம் வேத பாராயணம் ஸ்ரீ ருத்ரம் சமஹம் ஸ்ரீ சுக்தம் நடந்தது.
இதில் கருமாரி அம்மன் அலங்காரத்தில் கொலு அமைக்கப்பட்டது. இந்த கொலுவை நகரத்தார் வடபழனி திருப்புகழ் பாராயண குழுவினர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று கருமாரி அம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை வழிபட்டனர்.
சக்தி கொலுவில் இசை சொற்பொழிவு நடந்தது. முன்னதாக கொலுவுக்கு முதலில் வந்த குழந்தைகளின் பெற்றோருக்கு 10 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்பட்டது. அதில் கொலு குறித்த கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தோருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
நவராத்திரி திருவிழா வருகிற 4-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் செய்து வருகிறார்.