< Back
மாநில செய்திகள்
வடபழனி நிதி நிறுவன கொள்ளை வழக்கு: உறவினர் வீட்டில் பதுக்கிய ரூ.10 லட்சம் பறிமுதல்
சென்னை
மாநில செய்திகள்

வடபழனி நிதி நிறுவன கொள்ளை வழக்கு: உறவினர் வீட்டில் பதுக்கிய ரூ.10 லட்சம் பறிமுதல்

தினத்தந்தி
|
28 Aug 2022 7:45 AM GMT

வடபழனி நிதி நிறுவன கொள்ளை வழக்கில் உறவினர் வீட்டில் பதுக்கிய ரூ.10 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை வடபழனி, மன்னார் முதலி தெருவில் சரவணன் என்பவர் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் கடந்த 16-ந் தேதி முகமூடி அணிந்து புகுந்த 8 பேர் கும்பல் அங்கிருந்த ஊழியர்களை கத்தியால் தாக்கிவிட்டு, லாக்கரில் இருந்த ரூ.37 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து வடபழனி போலீசார் தனிப்படைகள் அமைத்து கல்லூரி மாணவர்கள் ரியாஸ் பாட்ஷா, கிஷோர்கரன், தமிழ்ச்செல்வன், ஜானி என்ற சந்தோஷ் மற்றும் கல்லூரி படிப்பை முடித்த வாலிபர்கள் என 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து சுமார் ரூ.17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தமிழ்ச் செல்வன், கிஷோர் கரன், மொட்டை கண்ணன் உள்ளிட்ட 5 பேரை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்த வடபழனி போலீசார், கொள்ளையடித்த பணத்தில் மீதமுள்ள பணத்தை எங்கு பதுக்கி வைத்துள்ளனர்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

இதில் பட்டதாரி வாலிபரான தமிழ்ச்செல்வன் கொள்ளையடித்த பணத்தில் ரூ.10 லட்சத்தை திருப்பத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இதுவரை கொள்ளை கும்பலிடம் இருந்து ரூ.27 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்