சிவகங்கை
வடமாடு மஞ்சுவிரட்டு
|தேவகோட்டை அருகே தாணிச்சாவூரணி கிராமத்தில் உள்ள நாட்டாளம்மன் கோவில் மது எடுப்பு விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
தேவகோட்டை
தேவகோட்டை அருகே தாணிச்சாவூரணி கிராமத்தில் உள்ள நாட்டாளம்மன் கோவில் மது எடுப்பு விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு கண்டதேவி கோவில் ஊருணி அருகே நடைபெற்றது. இதில் மொத்தம் 13 காளைகளும், 100 மாடுபிடி வீரர்களும் பங்கேற்று ஒவ்வொரு காளையாக அவிழ்த்து வடமாடு மஞ்சுவிரட்டு திடலில் இறக்கி விடப்பட்டது. இதில் ஒரு காளையை அடக்க 25 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டு அந்த காளையை அடக்க 9 பேர் கொண்ட குழுவினர் களம் இறக்கப்பட்டனர். முன்னதாக காளைகளுக்கு கமிட்டி சார்பில் மாலை அணிவித்து வேட்டி, துண்டுகள், பித்தளை விளக்குகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காளைகள் ஒவ்வொன்றாக விளையாட தொடங்கியது. இதில் சில காளைகள் மட்டும் மாடுபிடி வீரர்களிடம் பிடிப்பட்டது. பல காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற காளைகள் மற்றும் வீரர்களுக்கு முதல் பரிசாக ரூ.5001-ஐ தொழிலதிபர் ராஜ்குமார் வழங்கினார். மேலும் போட்டியில் சிறு, சிறு காயமடைந்தவர்களுக்கு அங்கிருந்த சுகாதாரத்துறையினர் சிகிச்சையளித்தனர். போட்டியை முன்னிட்டு தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.