புதுக்கோட்டை
அறந்தாங்கி, நமணசமுத்திரத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு
|அறந்தாங்கி, நமணசமுத்திரத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
மஞ்சுவிரட்டு
அறந்தாங்கி அருகே செட்டிக்காடு கிராமத்தில் மாசிமக திருவிழாவையொட்டி செட்டிக்காடு கண்மாய் திடலில் நேற்று காலை 11 மணியளவில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, கீரமங்கலம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. முதலில் உள்ளூர் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் வெளியூர்களில் இருந்து வந்த காளைகளை மாட்டின் உரிமையாளர்கள் அவிழ்த்து விட்டனர்.
இதில் ஒரு சில காளைகள் அப்பகுதி இளைஞர்களிடம் பிடிபட்ட நிலையில் பெரும்பாலான காளைகள் தப்பி ஓடின. இதையடுத்து, வெற்றி ெபற்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மஞ்சுவிரட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கண்டு களித்தனர்.
சிறப்பு பரிசுகள்
அரிமளம் ஒன்றியம் நமணசமுத்திரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூச்சொரிதல் விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நேற்று நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 13 காளைகள் கலந்து கொண்டன. மாடுபிடி வீரர்கள் 12 அணிகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு காளைகளை அடக்குவதற்கு 9 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு காளைகளையும் அடக்குவதற்கு 25 நிமிடங்கள் வழங்கப்பட்டன. 25 நிமிடங்களுக்குள் காளைகளை அடக்கினால் வீரர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இல்லையெனில் மாடுகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
வடமாடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 8 மாடுகள் பிடிபட்டன. 5 மாடுகள் பிடிபடவில்லை. வெற்றி பெற்ற வீரர் மற்றும் காளையின் உரிமையாளர்களுக்கு ரூ.5,023 மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மருத்துவ பரிசோதனை செய்த பிறகு போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.