நாமக்கல்
கால்நடைகளுக்கு கருச்சிதைவு நோய்க்கான இலவச தடுப்பூசி - கலெக்டர் உமா தகவல்
|நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கருச்சிதைவு நோய்க்கான இலவச போடப்பட்டு வருவதாக கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கருச்சிதைவு நோய்க்கு இலவச தடுப்பூசி போடப்பட்டு வருவதாக கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கருச்சிதைவு நோய்
புரூசெல்லோசிஸ் என்பது பசு, எருமைகளுக்கு கருச்சிதைவு மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் நோயாகும். இந்த நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் தீவிர காய்ச்சலும், சினை ஈன்றும் தருவாயில் (4 மாதம் முதல் 8 மாத கால கர்ப்ப பருவத்தில்) கருச்சிதைவும் ஏற்படுகிறது.
இந்த நோயினால் நஞ்சுக்கொடி தங்குதல், மீண்டும் எளிதில் சினை பிடிக்காமை, பால் உற்பத்தி குறைவினால் பொருளாதார இழப்பு ஆகியவை ஏற்படுகின்றன. இந்த நோய் வாய்ப்பட்ட மாட்டின் நஞ்சுக்கொடி போன்றவற்றை கையாளும் மனிதர்களுக்கும் இந்த நோய் பரவி தீவிர தாக்கத்தினை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
தடுப்பூசி
தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டதின் மூலம் இரண்டாவது தவணையாக புரூசெல்லோசிஸ் எனப்படும் கருச்சிதைவு நோய்க்கான தடுப்பூசி மாவட்டம் முழுவதும் கால்நடைகளுக்கு செலுத்தப்பட உள்ளது. இந்த நோய்க்கான தடுப்பூசி 4 மாதம் முதல் 8 மாதம் நிரம்பிய கிடாரி கன்றுகளுக்கு மட்டும் அடுத்த மாதம் (ஜூலை) 14-ந் தேதி வரையில் கால்நடை மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்தப்பட உள்ளது.
கால்நடைகளுக்கு இந்த தடுப்பூசியை ஒரு முறை செலுத்தி கொண்டால் அந்த கிடாரி கன்றுகளுக்கு அதன் ஆயுள் முழுவதற்குமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க பெறும். நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து கால்நடை நிலையங்களிலும் இந்த தடுப்பூசி செலுத்தப்படும். எனவே கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.