< Back
மாநில செய்திகள்
ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போடும் பணி
அரியலூர்
மாநில செய்திகள்

ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போடும் பணி

தினத்தந்தி
|
29 Sept 2023 12:52 AM IST

ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போடும் பணி அரியலூரில் 30 நாட்கள் நடக்கிறது.

வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்று ஆட்டுக்கொல்லி நோய். இது மிகக்கொடிய வைரஸ் கிருமிகளால் பரவுகிறது. மழை மற்றும் பனிக்காலங்களில் நோய் பாதித்த ஆடுகளின் சிறுநீர், கண்ணீர், கழிச்சல் மற்றும் சாணம் ஆகியவற்றின் மூலம் மிக விரைவில் நோய் பரவும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஆடுகளின் வாயிலும், நாக்கிலும், ஈறுகளிலும் புண்கள் ஏற்படும். கண்கள், மூக்கு மற்றும் வாயிலிருந்து நீர் வடியும். தும்மல் மற்றும் இருமல் ஏற்படும். மேலும் அவை தீனி உட்கொள்ள முடியாமல் பாதித்து, மெலிந்துவிடும். வெயில் காலத்தில், நோயினால் பாதிக்கப்பட்ட வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு மூச்சிரைக்கும். காய்ச்சல் வரும். இறுதியில் கழிச்சல் ஏற்பட்டு ஆடுகள் இறந்து போகும். நோய் தாக்கிய ஆடுகளில் நோயின் அறிகுறிகள் 6 நாட்களுக்கு இருக்கும். குட்டிகளில் அதிக இறப்பு ஏற்படும். இதனால் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் வளர்ப்பவர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும்.

எனவே, இந்த நோய் தாக்காமல் பாதுகாக்க ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போடுவதே சிறந்தது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையினரால், ஆட்டுக்கொல்லி நோய் ஒழிப்புத்திட்டத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தற்போது தொடங்கி, 30 நாட்களுக்கு நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 84 ஆயிரத்து 900 ஆடுகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, ஆடு வளர்ப்பவர்கள் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும்பொழுது, 4 மாதத்திற்கு குறைவான வயதுள்ள ஆட்டுக்குட்டிகள் மற்றும் சினையுற்ற ஆடுகள் நீங்கலாக மற்ற அனைத்து வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கும் தவறாமல் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்