சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
|சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
ஒரு நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்க வேண்டுமென்றால், ஒரு நாடு அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டுமென்றால், சமத்துவம் உறுதி செய்யப்பட வேண்டுமென்றால், சமூகநீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால், குற்றங்கள் குறைய வேண்டுமென்றால், அதற்குத் தேவையான நெறிமுறைகளை வகுத்தால் மட்டும் போதாது, அந்த நெறிமுறைகளை சட்டம் பயிலும் மாணவ, மாணவியருக்கு பயிற்றுவித்து, அதன்மூலம் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது ஒரு மாநில அரசின் கடமையாகும். ஆனால், இதனைச் செய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது.
கடந்த மூன்று ஆண்டிற்கும் மேற்பட்ட தி.மு.க. ஆட்சிக் காலத்தில், அனைத்து அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை உடனுக்குடன் நிரப்ப நான் பலமுறை அறிக்கைகள் வாயிலாக தி.மு.க. அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்கள் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டு முன்பு விசாரணைக்கு வந்தபோது, சட்டக் கல்வி இயக்குனர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழ்நாட்டில் உள்ள 15 சட்டக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட 20 இணைப் பேராசிரியர் பணியிடங்களில் 19 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், 206 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 70 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு அதிகமான காலிப் பணியிடங்களை நிரப்பாதது தி.மு.க. அரசின் அக்கறையின்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இந்த அளவுக்கு ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தால், ஆசிரியர்கள் எப்படி மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிக்க முடியும். அகில இந்திய அளவில் போட்டித் தேர்வுகளை எழுத வேண்டுமென்றால், சுப்ரீம் கோர்ட்டு மற்றும் பிற மாநில ஐகோர்ட்டுகளில் தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் சிறந்து விளங்க வேண்டுமென்றால், தரமான சட்டக் கல்வியை தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் அளிக்க வேண்டும். உயர் கல்விச் சேர்க்கை மட்டும் இருந்தால் போதாது, தரமான உயர் கல்வியை தமிழ்நாட்டு மாணவ, மாணவியர் பெற வேண்டும். இதற்கு இன்றியமையாதது ஆசிரியர் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்புவதுதான். ஆனால், இதைச் செய்ய தி.மு.க. தவறிவிட்டது. ஆசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால் சட்டக் கல்லூரிகளை மூடுவதே நல்லது என்று சென்னை ஐகோர்ட்டு குட்டு வைக்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் நிலைமை மோசமாக இருக்கிறது.
முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, சட்டக் கல்லூரிகள் உட்பட அனைத்துக் கல்லூரிகளிலும் காலியாக உள்ள இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.