காலி மருத்துவப் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
|தமிழகத்தில் காலியாக உள்ள அனைத்து மருத்துவப் பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
உலகமே மிரண்ட, மனித சமுதாயமே அரண்ட, யாரும் கேட்டிராத கொரோனா என்ற கொடிய அரக்கனை எதிர்த்து தங்கள் உயிரையும் துச்சமென நினைத்துப் போராடிய மருத்துவர்களையும், செவிலியர்களையும் நடுரோட்டில் விட்டது மற்றும் மக்கள் நலன் காக்கும் மருத்துவத் துறையை பாழாக்கியதுதான் இந்த விடியா தி.மு.க.-வின் 40 மாத கால சாதனை.
இந்த நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க. ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் உள்ளன. மக்கள் என்னும் சிங்கங்கள் அமைதியாக, பொறுமையாக இருப்பது இயலாமையால் அல்ல. சிங்கங்கள் பாயும் நாள் வரும், நாட்டாமை செய்யும் நரிகள் ஓட்டம் பிடிக்கும் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இன்றைய தேதியில் சுமார் 2,600 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்கள் காலியாக உள்ளது என்றும், செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்கள் என்று ஆயிரக்கணக்கான மருத்துவப் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் செய்திகள் தெரிய வருகிறது. மேலும், பல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வர் பதவியை நியமிக்க இயலவில்லை எனில் மருத்துவக் கல்லூரிகளை திறப்பது ஏன் ? என்று ஒரு வழக்கு விசாரணையின்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏற்கெனவே அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. எனவே, உடனடியாக விடியா தி.மு.க. அரசு தமிழகத்தில் காலியாக உள்ள அனைத்து மருத்துவப் பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார்.