< Back
மாநில செய்திகள்
4,808 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள்
திருவாரூர்
மாநில செய்திகள்

4,808 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள்

தினத்தந்தி
|
28 Jan 2023 12:07 AM IST

4,808 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

திருவாரூர், ஜன.28-


தீவிர சிகிச்சை பிரிவு

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ரூ.20 கோடி செலவில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். நாகை செல்வராசு எம்.பி., பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக அடிக்கல் நாட்டு விழா திடலுக்கு வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிட வரைபடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து மருத்துவக்கல்லூரி விடுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்ட நவீன சமையல் கூடத்தினை திறந்து வைத்தார்.விழாவில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ், தமிழ்நாடு தாட்கோ தலைவர் மதிவாணன், மாரிமுத்து எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் கண்ணன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சமையல் கூடம்

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் 50 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடம் ரூ.20 கோடியில் கட்ட டெண்டர் பணிகள் முடிந்து ஒப்பந்த ஆணைகள் வழங்கப்பட்டு இந்த பணி தொடங்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து நமக்கு நாமே திட்டத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் கல்லூரியில் தங்கி பயிலும் மாணவ-மாணவிகள் பயனுக்காக நவீன சமையல் கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரி மாணவர்களிடையே 'மருதம்' என்ற மாணவர் மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

டாக்டர்களுக்கு பணி நியமன ஆணை

திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதல் வசதியாக மாரடைப்பு கண்டறியும் 'கேத்லேப்' வசதி கேட்டிருந்தனர். அதன்படி ரூ.4 கோடியில் இதற்கான கருவியை கொள்முதல் செய்து விரைவில் இங்கு பொருத்தப்பட உள்ளது. ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் 10 டயாலிசிஸ் கருவிகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரடாச்சேரியில் விரைவில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமைய உள்ளது.தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் திருவாரூர் மாவட்டத்தில் ரூ.5.10 கோடியில் 24 கட்டடங்கள், 22 துணை சுகாதார நிலையங்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன்பிறகு ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு துணை சுகாதார நிலையம் அமையும். திருத்துறைப்பூண்டியில் சித்தா பிரிவு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த அவசிய ஆய்வக தேவைகளுக்கு ரூ.8.78 கோடி மதிப்பில் ஆய்வக பணிகள் நடந்து வருகிறது.

காலிப்பணியிடங்கள்

மருத்துவ துறையில் எம்.ஆர்.பி.யில் நிரப்பப்படும் அனைத்து பணிகளும் நிரந்தர பணிகள்தான். 4,808 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடந்து வருகிறது.கடந்த வாரம் 112 சித்தா டாக்டர்கள், 5 ஆயுர்வேத டாக்டர்கள், 13 ஓமியோபதி டாக்டர்கள் என 130 டாக்டர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. 1,021 டாக்டர்களுக்கு பணி நியமனத்துக்கான தேர்வு நடந்து வருகிறது.

மருத்துவத்துறை சார்பில் முறையீடு

பான்பராக், குட்கா போன்ற போதை பொருட்கள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்தார். கடந்த ஆட்சியில் இவை தாராளமாக கடைகளில் விற்கப்பட்டன. போதை பொருட்களுக்கு எதிராக தற்போது நடவடிக்கை மேற்கொண்டு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ஆனால் கர்நாடகா போன்ற மாநிலங்களில் இவற்றுக்கு தடையில்லை என்பதால் அங்கிருந்து இந்த பொருட்கள் காய்கறி, பூக்கள் ஏற்றி வரும் வானங்களில் கடத்தி வரப்படுகிறது. குட்கா, பான்மசாலா தொடர்பாக ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு தொடர்பாக மேல் முறையீடு செய்ய முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். விரைவில் மருத்துவத்துறை சார்பில் முறையீடு செய்யப்படும். இளைஞர்களை போதைக்குள்ளாக்கும் இப்பொருட்கள் நிரந்தரமாக தடைசெய்யப்பட வேண்டும்.

கொரோனாவுக்கு மூக்கு வழியாக மருந்து

கொரோனாவுக்கு மூக்கு வழியாக செல்லும் மருந்தை இன்று தான் (நேற்று) அறிமுகம் செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு சென்றபோது மத்திய மந்திரியை சந்தித்து மூக்கு வழியாக செலுத்தும் மருந்தை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு இலவசமாக வழங்க வலியுறுத்தபட்டது.ஆனால் முதற்கட்டமாக தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு மட்டுமே மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நர்சிங் கல்லூரி

தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்கு ஒரு நர்சிங் கல்லூரி திறக்க அனுமதி கோரியுள்ளோம். அனுமதி கிடைத்தால் முதல் கல்லூரி திருவாரூரில் தொடங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்