உ.பி.யில் கொடூரம்: பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கோடாரியால் வெட்டிக் கொலை
|கொலை செய்யப்பட்ட பெண்ணின் முகத்தில் சிகரெட்டால் சூடு வைத்த தடயங்கள் இருந்துள்ளன.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூர் பகுதியில் சாலையோரத்தில் ஒரு பெண்ணின் உடல் கிடந்துள்ளது. இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த பரிசோதனையின் முடிவில், சம்பந்தப்பட்ட பெண் உயிரிழப்பதற்கு முன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார் என்பதும், அவரது முகத்தில் சிகரெட்டால் சூடு வைத்த தடயங்கள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் அந்த பெண் கோடாரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த கொடூரக் கொலையை நிகழ்த்திய குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில், சூரஜ் குமார் சோன்கர் என்ற நபரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சூரஜ் குமார் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இது தொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள தகவலின்படி, கொலை செய்யப்பட்ட பெண், சூரஜ் குமாருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றுக்கொண்டு அவரை அலைக்கழித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த சூரஜ் குமார் கடந்த 3-ந்தேதி அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.