தேனி
உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்கள்
|உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட்டு ஊழியர்கள் வந்தனர்.
உத்தமபாளையம்,
உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் கடந்த 2016-ம் ஆண்டு ஒருங்கிணைந்த கோர்ட்டு கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. இதற்காக அந்த பகுதியில் நிலம் கையகப்படுத்தப்பட்ட உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. ஆனால் கூடுதல் இழப்பீட்டு தொகை கேட்டு நில உரிமையாளர்கள் பெரியகுளம் விரைவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்க உத்தரவிட்டது.
ஆனால் இழப்பீடு தொகை அரசு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய கோர்ட்டு உரிய நேரத்தில் பணம் வழங்காத ஆர்.டி.ஓ. அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
அதன்படி, கோர்ட்டு ஆணையுடன் நில உரிமையாளர்கள், வக்கீல், கோர்ட்டு அமினா மற்றும் ஊழியர்கள் ஆகியோர் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அப்போது ஆர்.டி.ஓ. பால்பாண்டியன் ஜப்தி நடவடிக்கை உத்தரவு நகலை பெற்று கொண்டு சிறிது கால அவகாசம் வழங்குங்கள், விரைவில் இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.
இதற்கிடையே அங்கு ஏராளமான பொதுமக்கள் ஆர்.டி.ஓ.விடம் மனு அளிக்க காத்திருந்தனர். மேலும், போடி, உத்தமபாளையம் ஆகிய தாலுகாவில் பணியாற்ற கூடிய கிராம நிர்வாக அலுவலர்கள் இடம் மாறுதல் சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டத்துக்கு வந்திருந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.