தேனி
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை கோவில் தெப்பத்தை சீரமைக்க வேண்டும் : பக்தர்கள் கோரிக்கை
|உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை கோவில் தெப்பத்தை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
உத்தமபாளையத்தில் தென் காளகஸ்தி என்று அழைக்கப்படும் காளாத்தீஸ்வரர்- ஞானாம்பிகை கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராகு கேதுக்கு என்று தனி தனி சன்னதி அமைந்துள்ளது. ராகு கேது பரிகார தலமாகவும் சிறப்பு பெற்று விளங்குகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இக்கோவிலின் தெப்பம் சிதிலமடைந்து கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மதுப்பாட்டில்களை உள்ளே வீசி செல்கின்றனர். எனவே சிதிலம் அடைந்து கிடக்கும் தெப்பத்தை சீரமைத்து தெப்பத்திருவிழா நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், கோவில் தேரோட்டத் திருவிழா முடிந்தவுடன் தெப்பத் திருவிழா நடத்துவது வழக்கம். ஆனால் தெப்பம் சீரமைக்கப்படாததால் திருவிழா நடத்துவதில்லை. எனவே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெப்பத்தை சீரமைக்கவும், திருவிழா நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவா்கள் கூறினர்.