காஞ்சிபுரம்
ஆக்சிஜன் முககவசத்துக்கு பதிலாக காகித 'டீ கப்பை' பயன்படுத்துவதா?
|அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் முககவசத்துக்கு பதிலாக காகித ‘டீ கப்பை’ பயன்படுத்திய ஊழியர்கள் மீது விசாரணை நடத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
உத்திரமேரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் உள்ள பள்ளி மாணவர் ஒருவர் வகுப்பறையில் இருந்தபோது மூச்சு விட சிரமப்பட்டுள்ளார். இதுகுறித்து மாணவரின் பெற்றோருக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாணவரை உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
மாணவரை பரிசோதித்த டாக்டர்கள் முதலில் மாணவருக்கு சீராக சுவாசிக்க ஆக்சிஜன் முக கவசம் பொருத்தும்படி பரிந்துரைத்தனர். உடனே மாணவரை வார்டில் அனுமதித்து ஆக்சிஜன் முக கவசம் பொருத்த முடிவு செய்தனர்.
இதை பொருத்துவதன் மூலம் சிலிண்டரில் இருந்து வரும் ஆக்சிஜனை சுவாசித்து மற்றொரு துவாரத்தின் வழியாக கார்பன்டை ஆக்சைடை வெளியேற்ற முடியும். இதில் உள்ள பிளாஸ்டிக் கயிறை தலையின் பின்புறம் மாட்டி விடுவார்கள். இதனால் மூக்கு மற்றும் வாய் பகுதியை விட்டு நகராமல் இருக்கும். ஆக்சிஜன் முக கவசம் இல்லாததால் டீ கப்பில் துவாரம் போட்டு அதை ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து வரும் டியூப்புடன் இணைத்து அதை மாணவர் கையில் கொடுத்து மூக்கில் வைத்து பிடித்து கொள்ளும்படி கூறியுள்ளனர். மாணவரும் அப்படியே சிரமப்பட்டு பிடித்துள்ளார்.
அதை அங்கு இருந்த யாரோ செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டு்ள்ளனர். இந்த விவகாரம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து அவர் உடனடியாக மருத்துவ பணிகள் இயக்குனரிடம் இதுகுறித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.