< Back
மாநில செய்திகள்
பழுது நீக்கும் பணிக்காக காட்டுப்பள்ளி துறைமுகம் வந்த அமெரிக்க கப்பல்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பழுது நீக்கும் பணிக்காக காட்டுப்பள்ளி துறைமுகம் வந்த அமெரிக்க கப்பல்

தினத்தந்தி
|
11 July 2023 4:51 PM IST

பழுது நீக்கும் பணிக்காக காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு அமெரிக்க கப்பல் வந்துள்ள நிலையில், ‘இந்தியாவில் கடற்படை தளம் அமைக்கும் திட்டம் இல்லை' என்று அமெரிக்க தூதரக தலைவர் கேப்டன் மைக்கேல் பார்மர் கூறினார்.

அமெரிக்க கடற்படை கப்பல்

மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் எல்.அன்ட்.டி. நிறுவனத்துக்கான துறைமுகம் உள்ளது. இங்கு கப்பல் கட்டுவது, பழுதுபார்ப்பது, பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த துறைமுகத்திற்கு அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 'யு.எஸ்.என்.எஸ். சால்வர்' என்ற கப்பல் நேற்று வந்தது. பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து கப்பல் தளத்தில் நடந்த விழாவில், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அலுவலகத் தலைவர் கேப்டன் மைக்கேல் பார்மர், சென்னையில் உள்ள அமெரிக்கா துணை தூதர் ஜூடித் ரேவின், எல்.அன்ட்.டி. வர்த்தகப் பிரிவின் நிர்வாக துணைத்தலைவர் மற்றும் தலைவர் எ.டி.ராம்சந்தனி, துணைத்தலைவர் கே.எஸ்.நாதன், கப்பல் கேப்டன் ஆண்ட்ரூ மேக்லியோட் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினர்.

கடற்படை தளம் திட்டம் இல்லை

இதுகுறித்து டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அலுவலக தலைவர் கேப்டன் மைக்கேல் பார்மர் கூறும் போது, 'சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தில் உள்ள எல்.அன்ட்.டி கப்பல் கட்டும் தளத்தில் உள்ள பழுது பார்க்கும் தளத்தில் ஏற்கனவே கடந்த ஆண்டு சார்லஸ் ட்ரூ, மேத்யூ பெரி ஆகிய அமெரிக்கா கப்பல்களுக்கு பழுது பார்க்கப்பட்டுள்ளது. 3-வதாக தற்போது சால்வர் கப்பல் வந்துள்ளது. எல்.அன்ட்.டி நிறுவனத்துடன் கப்பல்களை சரி செய்வதற்கான 5 ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதற்கு பிறகு பழுது பார்க்க வருகை தந்துள்ள முதல் கப்பல் சால்வர் கப்பலாகும். இந்த ஒப்பந்தம் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் கப்பல்கள், எண்ணெய் கப்பல்கள், சரக்கு கப்பல்கள் போன்றவை பழுதுபார்க்கப்படவுள்ளது. போர் கப்பல்கள் பழுது பார்க்கும் திட்டம் ஏதும் இல்லை.

இந்தியாவில் கடற்படை தளம் அமைக்கும் திட்டம் ஏதும் இல்லை. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா அமெரிக்கா இடையே இந்திய பசுபிக் பகுதியில் நீடித்த, வளமான, அமைதியான சூழல் ஏற்படும்' என்றார்.

மீட்பு சேவையில் 'சால்வர்'

'சால்வர்' கப்பல் 251 அடி நீளமும், 51 அடி அகலமும், 3 ஆயிரத்து 336 டன் எடை கொண்டதாகும். கடலில் மீட்பு, இழுத்து செல்லுதல், கடலோர தீயணைப்பு, கனரகப் பொருட்களை தூக்குதல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு பணிகளை சால்வர் கப்பல் ஈடுபட்டு வருகிறது. யு.எஸ்.என்.எஸ். சால்வர் கப்பலின் கட்டுமானம், அதன் வேகம் மற்றும் உறுதித்தன்மை, உலகம் முழுவதும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. அமெரிக்க கடற்படையின் 'காம்பாட் லாஜிஸ்டிக்ஸ்' ஆதரவுப் படையின் ஒரு அங்கமாக இது செயல்பட்டு, கடலில் உள்ள கடற்படைக்கு மீட்பு சேவைகளை வழங்கி வருகிறது என்று அதிகாரிகள் கூறினர்.

மேலும் செய்திகள்