< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் பழுதுபார்ப்பு-பராமரிப்பு பணிகளை முடித்துவிட்டு அமெரிக்க போர் கப்பல் இந்தோ-பசிபிக் பகுதிக்கு திரும்பியது
சென்னை
மாநில செய்திகள்

தமிழகத்தில் பழுதுபார்ப்பு-பராமரிப்பு பணிகளை முடித்துவிட்டு அமெரிக்க போர் கப்பல் இந்தோ-பசிபிக் பகுதிக்கு திரும்பியது

தினத்தந்தி
|
29 March 2023 4:30 AM IST

தமிழகத்தில் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை முடித்துவிட்டு அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல் இந்தோ-பசிபிக் பகுதிக்கு திரும்பியது.

கடற்படை கப்பல்

சென்னை அருகே காட்டுப்பள்ளியில் உள்ள 'எல் அண்டு டி' நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத்துக்கு அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான லூயிஸ் மற்றும் கிளார்க் வகை சரக்கு கப்பலான 'யு.எஸ்.என்.எஸ். மேத்யூ பெர்ரி' கடந்த 11-ந் தேதி பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிக்காக வந்தது. இதற்கான பணிகளை 27-ந் தேதி (நேற்று முன்தினம்) வெற்றிகரமாக நிறைவு செய்தது. இதையடுத்து மேத்யூ பெர்ரி போர் கப்பல் தனது வழக்கமான பணிக்காக இந்தோ-பசிபிக் கடல் பகுதிக்கு திரும்பியது.

பழுதுபார்ப்பு பணிக்காக இந்தியா வந்திருந்த அமெரிக்க கடற்படையின் 2-வது போர் கப்பல் இதுவாகும். 'யு.எஸ்.என்.எஸ். சார்லஸ் ட்ரூ' என்ற அமெரிக்க கடற்படை கப்பல் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 'எல் அண்ட் டி' தளத்தில் பழுதுபார்ப்பு பணியை மேற்கொண்டது. இந்திய கப்பல் கட்டும் தளங்களில் அமெரிக்க கடற்படையின் கப்பல்களை தொடர்ந்து பழுது பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இதன் மூலமாக நிறைவேறி வருகிறது.

இந்திய பயணம்

கடந்த ஆண்டு ஏப்ரலில் வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க-இந்திய மந்திரிகள் அளவிலான பேச்சுவார்த்தையில் அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாயிட் ஆஸ்டின் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் ஆகியோர் இதுதொடர்பாக விருப்பம் தெரிவித்ததை அடுத்து, இந்தியாவில் உள்ள கப்பல் பழுதுபார்க்கும் வசதிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு அமெரிக்க கடற்படை மற்றும் பாதுகாப்புத்துறையின் ஆர்வத்தினை 'யு.எஸ்.என்.எஸ். மேத்யூ பெர்ரி'யின் இந்திய பயணம் நிரூபிக்கிறது.

பிணைப்பு வலுப்படும்

இதுகுறித்து, சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதர் ஜூடித் ரேவின் கூறுகையில், "இந்தோ-பசிபிக் பகுதியில் அமெரிக்காவின் முக்கிய பங்குதாரராக இந்தியா திகழ்கிறது. அமெரிக்க கடற்படையின் 'மேத்யூ பெர்ரி' கப்பலின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் இந்தியாவில் நடைபெற்றதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு மேலும் வலுப்படும் என்று நம்புகிறேன்.

பாதுகாப்பு கப்பல்களை பயனுள்ள வகையில், திறமையான முறையில் மற்றும் குறைந்த செலவில் பழுதுபார்ப்பதில் பங்குதாரர்களாக இணைவதன் வாயிலாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை சுதந்திரமான, வெளிப்படைத்தன்மை மிக்க பகுதியாக விளங்கச் செய்வதில் நமது கப்பல் தொழில்துறைகள் கணிசமான பங்களிப்பை ஆற்றுகின்றன" என்றார்.

'மேத்யூ பெர்ரி' பெயர் வைக்க காரணம் என்ன?

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பலான 'யு.எஸ்.என்.எஸ். மேத்யூ பெர்ரி' 210 மீட்டர் நீளமும், 32.3 மீட்டர் அகலமும், 35 ஆயிரத்து 300 டன் திறனும் கொண்டது. அமெரிக்க கடற்படையின் ஒரு பிரிவை 1853-ல் ஜப்பானுக்கு வழிநடத்திய கடற்படை கொமடோர் மேத்யூ சி.பெர்ரியின் (1794-1858) நினைவாக இந்த கப்பலுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1812-ம் ஆண்டு போரிலும், மெக்சிகன் அமெரிக்க போரிலும் பங்கேற்ற அவர், மேற்கிந்திய தீவுகளில் கடற்கொள்ளை மற்றும் அடிமை வர்த்தகத்தை ஒடுக்க அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் செய்திகள்