நீலகிரி
உறியடி திருவிழா
|கோத்தகிரி அருகே உறியடி திருவிழா நடந்தது.
கோத்தகிரி அருகே ஓரசோலை கிராமத்தில் கிருஷ்ணர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் உறியடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தியன்று கோவிலில் சிறப்பு பூஜை நடந்து முடிந்த பிறகு, அக்டோபர் 2-ந் தேதி உறியடி திருவிழா நடத்துவது என கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் முடிவு செய்திருந்தனர். மேலும் உரியடிப்பதற்காக விருப்பம் தெரிவித்து காணிக்கை செலுத்தியவர்களில் இருந்து, குலுக்கல் முறையில் 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்தநிலையில் நேற்று உறியடி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கிருஷ்ணர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கிருஷ்ணர் வீற்றிருந்து ஒவ்வொரு வீடுகள் தோறும் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் தங்களது பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். மொத்தம் 5 உறிகள் கட்டப்பட்டு, உறியடிக்கும் திருவிழா நடைபெற்றது. விழாவில் ஓரசோலை கிராம மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு, கிருஷ்ணரை வழிபட்டு சென்றனர்.