பெரம்பலூர்
சின்ன வெங்காயத்தை மத்திய அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
|சின்ன வெங்காயத்தை மத்திய அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில செயலாளர் ஆர்.ராஜாசிதம்பரம் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் அரியலூர் மாவட்ட தலைவர் விஸ்வநாதன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் நீலகண்டன், பொருளாளர் மணி ஆகியோர் பேசினர். கூட்டத்தில், போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் பேரணி மாநாட்டை திருச்சியில் உழவர் பெருந்தலைவர் பிறந்த தினமான 5-ந்தேதி நடத்துவது. அதில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இருந்து திரளான விவசாயிகள் கலந்து கொள்வது. மேட்டூர்-சரபங்கா, மணிமுத்தாறு-அய்யாறு இணைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையில் தா.பேட்டை, கீரம்பூர் ஏரிகளில் தண்ணீரை தேக்கி பாசனத்திற்கு பயன்படுத்திட முந்தைய அரசால் திட்ட மதிப்பீடு தயார் செய்து கிடப்பில் போடப்பட்ட திட்டத்தை செயல்படுத்திட தமிழக அரசை கேட்டுக்கொள்வது.
மாநிலம் முழுவதும் ஏரி, குளம், வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாகுபாடின்றி அகற்ற வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தின் நீர்வளத்தை பெருக்கும் நோக்கில் ரூ.110 கோடி மதிப்பிலான கொட்டரை நீர்த்தேக்க திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துவரும் நிலையில் குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோவிற்கு ரூ.30 ஆக நிர்ணயம் செய்து நாபெட் மூலம் மத்திய அரசு கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். 2020-21 ஆண்டு அரவை பருவத்திற்கு, சர்க்கரை ஆலைகளுக்கு கரும்புவெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் நிலுவைத்தொகை, ஊக்கத்தொகையை வழங்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரதம மந்திரியின் கவுரவ நிதி உதவி திட்டத்தை எளிமைப்படுத்தி, ஆதார் அட்டை அடிப்படையிலேயே தொடர்ந்து நிதி வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் களரம்பட்டி துரைராஜன், சிறுகுடல் செல்லகருப்பு, சுந்தரராஜன், விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.