< Back
மாநில செய்திகள்
தமிழ்நாடு முழுவதும் கோவில் நிலங்களை மீட்க துரித நடவடிக்கை: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் கோவில் நிலங்களை மீட்க துரித நடவடிக்கை: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
19 July 2023 2:18 AM IST

தமிழ்நாடு முழுவதும் கோவில் நிலங்களை மீட்க துரித நடவடிக்கை அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது நிலத்துக்கு பட்டா வழங்கக்கோரி குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த நிலம் நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமானது என்பதால் அதற்கு பட்டா வழங்கக்கூடாது என்று அறநிலையத்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கை திரும்ப பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், கோவில் நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கை திரும்ப பெற அனுமதிக்கக்கூடாது என்று அறநிலையத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், "தமிழ்நாடு முழுவதும் கோவில் நிலங்கள், அறநிலையத்துறைக்கு தெரியாமல், அறங்காவலர்களால் சட்ட விரோதமாக மூன்றாவது நபர்களுக்கு விற்கப்பட்டுள்ளன.

எனவே, இதுதொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, ஆவணங்களை சேகரித்து, நிலங்களை தானம் அளித்தவர்களின் உணர்வுகளுக்கும், அவர்களின் எண்ணங்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில், கோவில் சொத்துக்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். பேராசை பிடித்த சிலர் இந்த மோசடி வலையில் சி்க்கி கோவில் நிலங்களை வாங்கி பாதிக்கப்படுகின்றனர். அதற்காக அவர்களுக்கும் கருணை காட்ட முடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்'' என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்