< Back
மாநில செய்திகள்
ரூ.30 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

ரூ.30 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தினத்தந்தி
|
27 July 2023 1:01 AM IST

ரூ.30 லட்சத்தை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசாரின் விசாரணை முகாமில் ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் மனு அளித்தார்.

நிலம் வாங்குவதற்காக...

போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு வளவன் தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றனர். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் தாலுகா, செங்குந்தர் நகர், 8-வது தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற உதவி தொடக்க கல்வி அலுவலர் கோவிந்தசாமி (வயது 70) என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியும், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 2 நபர்களும் எனக்கு குடும்ப நண்பர்கள் ஆகினர். அவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் குடும்ப செலவிற்காகவும், நிலம் வாங்குவதற்காகவும் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் என்னிடம் பணம் கேட்டதால் நான் அவருக்கு ரூ.40 லட்சம் கொடுத்தேன். அதற்கு அவர் வட்டி தருவதாகவும் கூறினார்.

கொலை மிரட்டல்

மேலும் அவர் வாரந்தோறும் சனிக்கிழமையில் ரூ.2½ லட்சம் தருவதாக கூறி இதுவரை மொத்தம் ரூ.10 லட்சம் மட்டுமே திருப்பி தந்துள்ளார். மீதமுள்ள ரூ.30 லட்சத்தை திருப்பி தராமல் என்னை அலைக்கழித்து வருகிறார். அவர் அந்த பணத்தை திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மேற்கண்ட குடும்ப நண்பர்களில் ஒருவரிடம் கொடுத்து வைத்துள்ளார். அதற்கு பணம் கடனாக வாங்கியவரின் மனைவியும், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு குடும்ப நண்பரும் உடந்தையாக உள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவரிடம் பிரதி வாரம் சனிக்கிழமையில் தர வேண்டிய ரூ.2½ லட்சத்தை அவர்களிடம் கேட்டதற்கு இந்த பணத்தை மட்டும் தான் தருவேன். மீதமுள்ள பணத்தை திருப்பி தர முடியாது என்றும், அவர்கள் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே ரூ.30 லட்சத்தை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களிடம் இருந்து என்னுடைய ரூ.30 லட்சத்தை திருப்பி பெற்று தரவும், தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மொத்தம் 17 மனுக்கள்

முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 17 மனுக்களில், 4 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் மாவட்ட போலீஸ் அலுவலகம் வருவதற்கு ஏதுவாக போலீசார் சார்பில் பாலக்கரையில் இருந்து போலீஸ் அலுவலகத்திற்கும், மீண்டும் காவல் அலுவலகத்திலிருந்து புதிய பஸ் நிலையம் செல்ல பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது, என்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு தெரிவித்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்