புதுக்கோட்டை
சமூக வலைதளத்தில் 'நீட்' தேர்வு குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
|சமூக வலைதளத்தில் ‘நீட்’ தேர்வு குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் வலியுறுத்தினார்.
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
'நீட்' தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளை எழுதும் மாணவ- மாணவிகள் அச்சமின்றி தேர்வு எழுத வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி வருகிறார். அதேபோன்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் மாணவர்கள் எந்தவித அச்சமும் இன்றி தேர்வை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறது. ஆண்டுதோறும் 'நீட்' தேர்வு நடைபெறுகிறது. இதற்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர். ஒரு சிலர் தேர்வு குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து மாணவர்களை குழப்பி வருகின்றனர். 'நீட்' தேர்வு தொடர்பாக மாணவர்களின் மனநிலையை பாதிக்காத வகையில் தமிழகத்தில் உள்ள மூத்த அரசியல்வாதிகள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். சமூக வலைதளத்தில் 'நீட்' தேர்வு குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.