< Back
மாநில செய்திகள்
அரியலூர் தற்காலிக பஸ் நிலையத்தை வார சந்தையில் அமைக்க வலியுறுத்தல்
அரியலூர்
மாநில செய்திகள்

அரியலூர் தற்காலிக பஸ் நிலையத்தை வார சந்தையில் அமைக்க வலியுறுத்தல்

தினத்தந்தி
|
18 Feb 2023 1:11 AM IST

அரியலூர் தற்காலிக பஸ் நிலையத்தை வார சந்தையில் அமைக்க வலியுறுத்தப்பட்டது.

அரியலூர் நகரில் கடந்த 1975-ம் ஆண்டு பேரூராட்சி சார்பில் கோ.சிவபெருமாள் நினைவு பஸ் நிலையம் கட்டப்பட்டது. அதன் பிறகு 2 முறை விரிவுபடுத்தப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கட்டிடங்கள் இடிந்து விழ ஆரம்பித்ததால் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து விபத்துகள் ஏற்படாமல் இருக்க சேதமடைந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. அதன் பிறகு கொரோனா நோய் தொற்று காரணமாக எந்த பணிகளும் நடைபெறவில்லை.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதே இடத்தில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை ஆரம்பிக்க உள்ளது. தற்போது பஸ் நிலையத்தில் கடை வைத்திருக்கும் அனைத்து கடை வாடகைதாரர்களுக்கும் நகராட்சி நிர்வாகம் ஒரு வாரத்தில் கடைகளை காலி செய்து தர வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்துள்ளது. தற்காலிக பஸ் நிலையம் அமைப்பதற்கான பணிகளையும் நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. புதிய பஸ் நிலையம் கட்ட குறைந்தது 6 மாதங்கள் ஆகும் என்று தெரிகிறது.

அதுவரை தற்காலிக பஸ் நிலையத்தை பெரம்பலூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்க உள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அங்கு அமைக்காமல் பஸ் நிலையத்தின் அருகிலேயே உள்ள வார சந்தையில் அமைக்க வேண்டும் என்று நகரில் உள்ள பலதரப்பட்ட மக்கள் கூறி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும் வார சந்தையை ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காலி இடத்தில் இட மாற்றம் செய்யலாம். மினி பஸ்களை பஸ் நிலையம் அருகில் உள்ள வண்ணான் குட்டை காலி இடத்தில் இருந்து புறப்பட ஏற்பாடுகள் செய்யலாம்.

நகரில் உள்ள அரசு கலைக்கல்லூரி, ெரயில் நிலையம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வியாபாரம் சம்பந்தமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் பஸ்களில் வந்து அங்கிருந்து குறைவான தூரம் உள்ள அனைத்து இடங்களுக்கும் நடந்து சென்று வருகின்றனர். பெரம்பலூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டால் பள்ளி மாணவ-மாணவிகள், உடல் ஊனமுற்றோர் மற்றும் பலருக்கும் சிரமம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

நகரில் இருந்து தற்போது உள்ள பஸ் நிலையத்திற்கு ஆட்டோவில் வருவதற்கு ரூ.100 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் அமைத்தால் திருச்சிக்கு ஒருவர் செல்வதாக இருந்தால் டிக்கெட் கட்டணம் ரூ.50 மட்டுமே. ஆனால் அங்கு செல்ல ஆட்டோவிற்கு ரூ.200 குறையாமல் செலவு செய்ய வேண்டும் என்பது அனைவருடைய கவலையாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் தற்காலிக பஸ் நிலையத்தை நகரில் அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்