< Back
மாநில செய்திகள்
சுங்கச்சாவடி ஊழியர்களை மீண்டும் சேர்க்க வலியுறுத்தல்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

சுங்கச்சாவடி ஊழியர்களை மீண்டும் சேர்க்க வலியுறுத்தல்

தினத்தந்தி
|
19 Nov 2022 11:16 PM IST

திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் சேர்க்க வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூரில் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் மாநாடு நேற்று நடந்தது. சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் சண்முகம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநில செயலாளர் சந்திரக்குமார் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஆஷா பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து குறைந்தபட்ச மாத சம்பளம் வழங்கிட வேண்டும். நுகர்பொருள் வாணிப கழக சுமை தூக்கும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து தொகுப்பூதியம் நிர்ணயம் செய்திட வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலவாரியம் பதிவு செய்வதை அரசு கணினி மையம் மூலம் இலவசமாக பதிவு செய்திட வேண்டும். திருமாந்துறை சுங்கச்சாவடிப் பணியாளர்கள் 28 பேரை எவ்வித சட்ட நடைமுறையையும் பின்பற்றாமல் பணி நீக்கம் செய்துள்ளதை ரத்து செய்து, அவர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதி வழங்கிட வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் வேலை நாட்களை ஆண்டுக்கு 200 நாட்களாக உயர்த்துவதுடன், குறைந்தபட்ச ஊதியம் ரூ.201 என்பதை முழுமையாக வழங்கிட வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு குடும்ப உதவித்தொகை மற்றும் பென்சன் தொகையை காலதாமதம் செய்யாமல் அனைவருக்கும் வழங்கிட வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் சலவைத் தொழிலாளிகள் மற்றும் தையல் கலைஞர்களுக்கு உபகரணம் ஆண்டுதோறும் வழங்கிட வேண்டும், அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், பணி ஓய்வு பெற்ற பணியாளர்களின் பணிக்காலப் பயன்களை உடனடியாக வழங்கிட வேண்டும். மானாவாரி பயிர்களான பருந்தி, மக்காச்சோளம், சின்னவெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டு, நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் இந்தாண்டுக்கான பயிர் காப்பீடு தொகையை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்