< Back
மாநில செய்திகள்
விவசாய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை காலம் தாழ்த்தாமல் அமல்படுத்த வலியுறுத்தல்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

விவசாய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை காலம் தாழ்த்தாமல் அமல்படுத்த வலியுறுத்தல்

தினத்தந்தி
|
6 May 2023 12:37 AM IST

விவசாய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை காலம் தாழ்த்தாமல் அமல்படுத்த வேண்டும் என தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் வலியுறுத்தினார்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாவட்ட பொதுக்கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் பூ.விசுவநாதன் தலைமை தாங்கினார். இதில் தமிழக அரசு விவசாயிகளுக்கு அறிவித்துள்ள மானியத் தொகைகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். கடலை விவசாயிகளுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும். வெளி மாவட்ட வியாபாரிகள் கலந்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னா் பூ.விசுவநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசு பசும்பாலுக்கு கொள்முதல் விலையை ரூ.45 ஆக நிர்ணயிக்க வேண்டும். விவசாயிகளுக்கு மாற்று தீவனங்களை ஆவின் மூலமாக 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும். கடலை விவசாயிகள் லாபகரமாக தாங்கள் விளைவித்த கடலைகளை வியாபாரம் செய்ய முடியவில்லை. அதிகாரிகள், கடலை வியாபாரிகள் ஆகியோர் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு வெளி மாவட்ட வியாபாரிகளை ஏலம் எடுப்பதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதிப்பது கிடையாது. எனவே கடலை அதிகளவு ஏலம் போவது கிடையாது. இதனால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வெளி மாவட்ட வியாபாரிகளையும், கடலை ஏலத்தில் கலந்து கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். விவசாய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை உடனடியாக காலம் தாழ்த்தாமல் அமல்படுத்துவதற்கு அரசு முன்வர வேண்டும். காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை 2024-ம் ஆண்டுக்குள்ளாவது புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாறு வரை கடலில் வீணாக செல்லும் நீரை கொண்டு வருவதற்கு முறையாக வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்