புதுக்கோட்டை
பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய நூலகம் கட்ட வலியுறுத்தல்
|பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய நூலகம் கட்ட வலியுறுத்தப்பட்டது.
கறம்பக்குடி அருகே இன்னான்விடுதி கிராமம் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், படித்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நூலகம் தொடங்கப்பட்டது. இதில் ஏராளமான புத்தகங்களும், தினசரி நாளிதழ்களும் வாங்கப்பட்டு பொதுமக்கள் படித்து வந்தனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நூலக கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு புத்தகங்கள் வைக்க இரும்பு அலமாரி உள்பட தளவாட பொருட்களும் வாங்கப்பட்டன. ஆனால் காலப்போக்கில் இந்த நூலக கட்டிடம் பராமரிப்பு இன்றி பழுதடைந்தது. இதனால் நூலகம் செயல்படவில்லை. கட்டிடத்தின் முன்பு முட்புதர்கள் மண்டி கிடக்கின்றன. புத்தக அலமாரிகள் தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளது. மேலும் கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இந்த கட்டிடம் பயன்பாடு இன்றி உள்ளதால் சமூக விரோதிகள் மற்றும் மது பிரியர்களின் கூடாரமாக திகழ்கிறது. இதனால் கிராம மக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே பழுதடைந்த நூலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய நூலக கட்டிடம் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.