< Back
மாநில செய்திகள்
சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு
மாநில செய்திகள்

சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு

தினத்தந்தி
|
1 July 2024 9:35 PM IST

முதல்நிலைத் தேர்வு கடந்த மே மாதம் 26-ந்தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில், தேர்தலை கருத்தில் கொண்டு ஜூன் 16-ந்தேதிக்கு மாற்றப்பட்டது.

சென்னை,

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட சிவில் சர்வீசஸ் பதவிகளில் வரும் காலி இடங்களுக்கு தகுதியானவர்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) தேர்வு செய்து வருகிறது. அந்தவகையில் முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் இந்த பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

அதன்படி, நடப்பாண்டில் மொத்தம் 1,056 பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதி யு.பி.எஸ்.சி. வெளியிட்டது. நாடு முழுவதும் சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்ததாக சொல்லப்பட்டது. முதல்நிலைத் தேர்வு கடந்த மே மாதம் 26-ந்தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில், தேர்தலை கருத்தில் கொண்டு ஜூன் 16-ந்தேதிக்கு மாற்றப்பட்டது.

அந்த வகையில், முதல்நிலைத் தேர்வு கடந்த மாதம் (ஜூன்) 16-ந்தேதி நாடு முழுவதும் 79 நகரங்களிலும், தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய 5 நகரங்களிலும் நடைபெற்றது.

இந்நிலையில் சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு முடிவுகளை யு.பி.எஸ்.சி. இன்று வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதிய தேர்வர்கள் https://upsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று தேர்ச்சி பெற்றுள்ளதை தெரிந்து கொள்ளலாம் என யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

இந்த தேர்வு முடிவில் நாடு முழுவதும் எழுதியவர்களில், 14 ஆயிரத்து 627 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக, வெற்றி பெற்றவர்களின் பட்டியலையும் யு.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு வருகிற செப்டம்பர் 20-ந்தேதி தொடங்குகிறது.

மேலும் செய்திகள்