நாகப்பட்டினம்
அடிப்படை வசதிகள் இல்லாத வெளிப்பாளையம் ரெயில் நிலையம்
|அடிப்படை வசதிகள் இல்லாத வெளிப்பாளையம் ரெயில் நிலையம்
வெளிப்பாளையம் ரெயில் நிலையம் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. எனவே தாழ்வான நடைமேடையை உயர்த்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெளிப்பாளையம் ரெயில் நிலையம்
நாகை புதிய பஸ் நிலையம் அருகே வெளிப்பாளையம் ெரயில் நிலையம் உள்ளது. இங்கு காரைக்கால்- திருச்சி மார்க்கமாக சென்று வரும் பயணிகள் ெரயில்கள் நின்று செல்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் ரெயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். நகரின் மையப்பகுதியில் இருப்பதால் நாகை வெளிப்பாளையம் ரெயில் நிலையம் எப்போதுமே பரபரப்பாகவே காணப்படும்.
அடிப்படை வசதிகள் இல்லை
முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரெயில் நிலையத்தில் அமர்வதற்கு இருக்கை, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லாததால், பயணிகள் முகம் சுளிக்கும் நிலையில் லாயக்கற்று கிடைக்கிறது.
வெளிப்பாளையம் ெரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும், ெரயில்வே நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாக ரெயில் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ரெயில் பயணி நாகை அசோகன் கூறுகையில், நாகை நகருக்குள் முக்கிய ரெயில் நிலையமாக வெளிப்பாளையம் உள்ளது. புதிய பஸ் நிலையம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, கலெக்டர் அலுவலகம், தனியார் கல்லூரி, பள்ளிகள் உள்ளிட்டவை அருகருகே அமைந்துள்ளது. எனவே தினமும் ஏராளமான பயணிகள் வெளிப்பாளையம் ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். காலை, மாலை கூட்டம் அதிகமாக இருக்கும். இவ்வாறு இருக்க ரெயில் நிலைய நடைமேடை மிகவும் தாழ்வாக உள்ளதால் பயணிகள் ரெயிலின் படிக்கட்டில் ஏறி இறங்க சிரமப்படுகின்றனர்.
நடைமேடையை உயர்த்த வேண்டும்
எனவே பயணிகளின் கோரிக்கையை ஏற்று வெளிப்பாளையம் ரெயில் நிலைய நடைமேடையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிப்பாளையம் ரெயில் நிலையத்தை சுற்றி முக்கியமான இடங்கள் இருப்பதால் நாகை ரெயில் நிலையத்தில் நிற்கும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும், பயணிகளின் நலன் கருதி வெளிப்பாளையம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து கல்லூரி மாணவர் சர்புதீன் கூறுகையில், தினந்தோறும் வெளிப்பாளையம் ரெயில் நிலையத்துக்கு வந்து செல்கிறேன். அமர்வதற்கு கூட இடமில்லாமல், ரெயில் நிலையம் மோசமான நிலையில் இருக்கிறது.
அதேபோன்று குடிதண்ணீர் வசதியும் செய்யப்படவில்லை. இதனால் இங்கு வரும் பயணிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட குடிநீர் குழாய் உடைந்து கிடக்கிறது. மேலும் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் வசதிக்காக கழிவறை கட்டப்பட்டுள்ளது. ஆனால் இங்கு தண்ணீர் வசதி செய்யப்படாததால் பயணிகள் அதை பயன்படுத்த முடியாமல் கழிவறை காட்சி பொருளாகவே இருக்கிறது என்றார்.