ராணிப்பேட்டை
4,557 புலம்பெயர் தொழிலாளர்கள் விவரம் பதிவேற்றம்
|ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4,557 புலம் பெயர் தொழிலாளர்களின் விவரம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்தும், அரசின் உதவிகள் குறித்தும் தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் ஓட்டல் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ச.வளர்மதி தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் பணிபுரிந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பல்வேறு விதமான செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்போது புலம்பெயர் தொழிலாளர்கள் பல வகையான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் எவ்வித அச்சம் கொள்ள வேண்டாம். மேலும் பணிபுரிவது தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் 04172- 271966, 94896 68833 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கலாம்.
பதிவேற்றம்
கட்டுமானம் மற்றும் அதை சார்ந்த தொழில்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் அலுவலகத்தால் தொழிலாளர் துறையின் https://labour.tn.gov.in/ism/ என்ற வலைதளத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த விவரம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களை தொழிலாளர் குறித்த விவரங்களை உதவி ஆணையரால் (அமலாக்கம்) பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4,557 தொழிலாளர்கள் பதிவேற்றம் செய்துள்ளனர். பணிபுரியும் இடத்தில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு மிரட்டல்கள், துன்புறுத்தல்கள் இருந்தால் கண்டறிந்து அதனை சரிசெய்து பாதுகாப்பினை தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் நிறுவனங்கள், வியாபாரிகள் சங்கம், வேலையளிப்போர் அமைப்புகள், தொழிற்சங்கள் அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் திட்ட இயக்குனர் ஜி.லோகநாயகி, தொழிலாளர் நல உதவி ஆணையர் திருஞானவேல், தொழிலாளர் பாதுகாப்பு துணை இயக்குனர் சாந்தினி பிரபா, நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் தொழில் நிறுவன பிரதிநிதிகள், ஓட்டல் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.