< Back
மாநில செய்திகள்
மாநகர பஸ்களில் யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தி டிக்கெட்: புதிய வசதி அறிமுகம்
மாநில செய்திகள்

மாநகர பஸ்களில் யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தி டிக்கெட்: புதிய வசதி அறிமுகம்

தினத்தந்தி
|
29 Jan 2024 7:54 PM IST

இது படிப்படியாக சென்னையில் உள்ள அனைத்து டெப்போக்களிலும் விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மாநகர போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணிகளுக்கு டிக்கெட்டுகள் கிழித்து கொடுத்து வந்த நிலையில், கையடக்க மின்னணு டிக்கெட் விற்பனை கருவிகள் மூலம் அந்தந்த நேரத்தில், பயணிகளின் பயண விவரங்களுக்கு ஏற்ப டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டு வழங்கும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு வழக்கத்தில் கொண்டு வரப்பட்டன.

இந்த கையடக்க கருவிகள் மூலம் டிக்கெட் வழங்குவதால், பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை, பயணிகள் மேற்கொள்ளும் பயண விவரங்கள், பஸ்களில் காலியாக உள்ள இருக்கைகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் உடனடியாக அறிந்து கொள்ள முடிந்தது.

தற்போது, காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் உருவாகி வரும் நிலையில், பயணிகள் தங்கள் பயணச்சீட்டுக்கு தேவையான பணத்தை யு.பி.ஐ. மூலமும், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வழியாகவும் செலுத்தும் வகையில் புதிய மின்னணு டிக்கெட் விற்பனை கருவிகளை பயன்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்.

அதன்படி, இத்தகைய வசதிகள் கொண்ட கையடக்க மின்னணு டிக்கெட் விற்பனை செய்யும் கருவிகள் முதல் முறையாக பல்லாவரம் பஸ் டெப்போவில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பஸ் கண்டக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக சென்னையில் உள்ள அனைத்து டெப்போக்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும். இந்த கருவியில், பயணிகள் ஏறும் பஸ் நிறுத்தம் மற்றும் இறங்கும் பஸ் நிறுத்தத்தின் பெயரையும் தேர்வு செய்த உடன் பயணிகள் பணம் செலுத்துவதற்கான யு.பி.ஐ. முறை அல்லது கார்டு முறையை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் திரையில் தெரியவரும்.

இதில், யு.பி.ஐ. முறையை தேர்வு செய்தால், தொடுதிரையில் கியூ.ஆர். கோடு தென்படும். அதனை பயணிகள் தங்கள் செல்போன் மூலம் தங்களது யு.பி.ஐ. செயலிகளால் ஸ்கேன் செய்து உரிய பணத்தை செலுத்திக் கொள்ளலாம்.

இதே போன்று, பொதுமக்கள் தங்கள் செல்போன்களில் செயலியை(ஆப்) பயன்படுத்தி மெட்ரோ ரெயில், மின்சார ரெயில் மற்றும் பஸ்களில் பயணம் செய்யும் வகையிலான செயலிகளும் விரைவில் வர இருப்பதாக போக்குவரத்து வட்டாரங்களில் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்