கரூர்
கரூர் ரெயில் நிலையத்தை ரூ.34 கோடியில் மேம்படுத்தும் பணி
|ரூ.34 கோடியில் கரூர் ரெயில் நிலையத்தை மேம்படுத்தும் பணியினை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார்.
ரூ.34 கோடி மதிப்பீடு
நாடு முழுவதும் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களை மறுசீரமைக்கும் திட்டத்தை ரெயில்வே அமைச்சகம் தொடங்கியுள்ளது. அம்ரித் பாரத் ரெயில் நிலையங்கள் என்ற திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 508 ரெயில் நிலையங்களை ரூ.24 ஆயிரத்து 470 கோடியில் மேம்படுத்தும் பணியினை காணொலி காட்சி வாயிலாக நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் கரூர் ரெயில் நிலையமானது ரூ.34 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்கான நிகழ்ச்சி கரூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்றது.
குத்துவிளக்கு ஏற்றி வைத்து...
இந்த நிகழ்ச்சியை கரூர் தொகுதி எம்.பி. ஜோதிமணி, மாவட்ட பா.ஜ.க. தலைவர் செந்தில்நாதன், சேலம் கோட்ட முதன்மை திட்ட இயக்குனர் அணில்குமார் பஞ்சியார், மாவட்ட வருவாய் அலுவலர் ரூபினா உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தனர். இந்த திட்டத்தின் மூலம் கரூர் ரெயில் நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட நடைபாதைகள், சிறந்த முகப்பு தோற்றம், நகரும் படிக்கட்டுகள், லிப்ட் வசதி, விசாலமான காத்திருப்பு அறை, கழிப்பறை வசதி மற்றும் 400 இருசக்கர மற்றும் 100 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துமிடம் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் செய்யப்பட உள்ளது.
4-வது மிகப்பெரிய ஏற்றுமதி
விழாவை தொடங்கி வைத்து ஜோதிமணி எம்.பி. பேசுகையில், இது கரூர் நாடாளுமன்ற தொகுதியில் நடக்கின்ற முக்கியமான மேம்பாட்டு பணியாகும். கடந்த 2020-ம் ஆண்டிலேயே கரூர் ரெயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் சார்பாக முன் வைத்திருந்தேன். ஏனென்றால் இந்தியாவிலேயே 4-வது மிகப்பெரிய ஏற்றுமதியை கொண்ட நகரம் கரூர். நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 2 லட்சம் வேலை வாய்ப்புகளை கொண்டுள்ளது. தற்போது இந்த ரெயில் நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என கூறினார். முன்னதாக பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து ரெயில்வே துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.