அ.தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறையில் வீண் செலவு - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குற்றச்சாட்டு
|அ.தி.மு.க. ஆட்சியில் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
சென்னை,
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், சி.ஏ.ஜி. அறிக்கையில் கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியில் 5.09 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்திருப்பதாக கூறினார்.
பழங்குடியினருக்கான 60 சதவீத வீடுகள் அந்த மக்களை சென்றடையவில்லை என சி.ஏ.ஜி. தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடந்த அதிமுக ஆட்சியில் தகுதியற்ற பயனாளிகளுக்கு 3,354 வீடுகள் முறைகேடாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சி.ஏ.ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
அதிமுக ஆட்சியின்போது 3% மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகளை நோக்கி சென்றுள்ளனர். பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய வீடுகளை, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கியுள்ளனர். தேவையற்ற செலவுகளையே அதிமுக அரசு செய்துள்ளதை சி.ஏ.ஜி. அறிக்கை தெளிவாக காட்டியுள்ளது என்றார்.
மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறையில் வீண் செலவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், அ.தி.மு.க. ஆட்சியில் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததாக தெரிவித்தார். ஒரு நிர்வாகம் எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு அ.தி.மு.க. ஆட்சி ஒரு உதாரணம் என்று கூறிய அவர், கடந்த 2 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் புதிதாக மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "2016 ஆம் அண்டு முறைகேடுகளில் ஈடுபட்ட 6 அதிகாரிகளை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளோம். மடிக்கணினி திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் 1.75 மாணவர்களுக்கு வழங்கவில்லை. ரூ. 2.18 கோடி தேவையற்ற செலவு என அறிக்கை குறிப்பிட்டு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.