அரியலூர்
'நீட்' தேர்வு ரத்தாகும் வரை தி.மு.க. சார்பில் சட்ட போராட்டம் தொடரும்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
|‘நீட்’ தேர்வு ரத்தாகும் வரை தி.மு.க. சார்பில் சட்ட போராட்டம் தொடரும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
மருத்துவ சேவைகள்
அரியலூரில் கடந்த 2021-22-ம் நிதி ஆண்டில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரால் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ந்தேதி காணொலி காட்சியின் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ சேவைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் விழா நேற்று நடந்தது. இதையொட்டி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சியில் இருந்து கார் மூலம் அரியலூருக்கு நேற்று காலை வந்தார்.
இதைத்ெதாடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 5 தளங்களை கொண்ட 700 படுக்கை வசதிகளுடன் கூடிய பல்வேறு மருத்துவ சேவைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மருத்துவமனையின் புற நோயாளிகள் பிரிவினை தொடங்கி வைத்து, அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர மருத்துவ முன்னெடுப்பு சிகிச்சை பிரிவினை திறந்து வைத்து, இப்பிரிவில் உள்ள அதிதீவிர மருத்துவ சிகிச்சை பிரிவினை பார்வையிட்டு மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
நீட் தேர்வு ரகசியம்
இதையடுத்து விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
அமைச்சராக பொறுப்பேற்று முதல் முறையாக அரியலூருக்கு வருகை புரிந்துள்ளேன். நான் தேர்தல் பிரசாரத்தில் 'நீட்' தேர்வு ரகசியம் என்று குறிப்பிட்டதை, தற்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அது என்ன? என்று ஒவ்வொரு மேடைகளிலும் விமர்சித்து வருகிறார். நான் தேர்தல் பிரசாரத்தில் கூறியது போலவே, சட்டமன்றத்தில் நான் பேசிய முதல் கன்னிப்பேச்சில் 'நீட்' தேர்வை எதிர்த்து போராடி உயிரை மாய்த்துக்கொண்ட அனிதாவின் பெயரில் அரங்கம் அமைக்க வேண்டும் என்று பேசினேன்.
தற்போது தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின்படி அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு சகோதரி அனிதாவின் பெயர் சூட்டப்படுகிறது. இதை பார்க்கும்போதெல்லாம் 'நீட்' தேர்வுக்காக நாம் போராடுவது நினைவிற்கு வரும். அண்மையில் பிரதமரை சந்தித்தபோது நான் முதலில் வைத்த கோரிக்கை 'நீட்' தேர்வு ரத்து என்பதுதான். அதற்கு பிரதமர் மோடி 'நீட்' தேர்வு தேவைக்கான அவசியங்களை எடுத்து கூறினார்.
சட்ட போராட்டம் தொடரும்
ஆனால் நான் மற்றும் தமிழகத்தில் மாணவர்கள் 'நீட்' தேர்வை ஏற்கவில்லை. 'நீட்' தேர்வை ரத்து செய்யும் வரை சட்ட போராட்டத்தினை தி.மு.க. தொடரும் என்று கூறிவிட்டு வந்துள்ளேன். 'நீட்' தேர்வு ரத்தாகும் வரை தி.மு.க. சார்பில் சட்ட போராட்டம் தொடரும் என்பது எனது 'நீட்' தேர்வின் ரகசியம். தமிழகத்தில் அரசின் திட்டங்களான மகளிருக்கான இலவச பஸ் பயணத்தில் 250 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுமை பெண் திட்டத்தில் 2 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடியே 10 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.
அதேபோல், அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், இன்னுயிர் காக்கும் 48 திட்டம், இல்லம் தேடி கல்வித்திட்டம் என பல்வேறு திட்டங்களினால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாடு முதல்-அமைச்சர், இந்தியாவிலேயே தமிழகத்தை நம்பர் ஒன் மாநிலமாக மாற்றி காட்டி விட்டார். தற்போது இந்தியாவில் வளர்கின்ற மாநிலங்களிலேயே நம்பர் ஒன் மாநிலம் தமிழ்நாடு என்று பெருமையை பெற்று தந்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
அனிதா நினைவு அரங்கம்
அதனை தொடர்ந்து அவர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் பயிலும் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டு அரசு பள்ளி மாணவர்கள் 10 பேருக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், ஆய்வக உபகரணங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கினார். இதையடுத்து அவர் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 2,539 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியே 68 லட்சத்து 55 ஆயிரத்து 250 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிலையில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு 'அனிதா நினைவு அரங்கம்' என்று பெயர் சூட்டப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை அறிவித்தார். இதைத்தொடர்ந்து உடனடியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு 'அனிதா நினைவு அரங்கம்' என்று பெயர் பொறித்த பலகையினை திறந்து வைத்து, அரங்கினை பார்வையிட்டார்.