வரலாறு காணாத பெருவெள்ளம்... மத்திய அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெருமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுசெய்தார்.
சென்னை,
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் பாதிப்பில் இருந்து தமிழகம் மீண்டுவரும் நிலையில், தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது.
குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து மற்றும் இணைய சேவைகள் முடங்கியுள்ளன.
இதற்கிடையில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெருமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வுசெய்தார். பின்னர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய அவர், நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கும் நிவாரண தொகையை அறிவித்தார்.
இந்த நிலையில், மத்திய அரசு உடனடியாக நிவாரணம் வழங்கக்கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;
"வரலாறு காணாத இந்த மாதப் பெருவெள்ளப் பாதிப்பிற்கு, வழக்கமான மாநில பேரிடர் நிவாரண நிதி வழங்கப்பட்டிருக்கிறதே தவிர, இதுவரை தேசிய பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கப்படவில்லை என்று ஊடகவியலாளர்கள் கேள்விக்குப் பதிலளித்தேன்.
தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக நிதி வழங்குமாறு ஒன்றிய அரசைத் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.