< Back
மாநில செய்திகள்
தேசிய அளவிலான ஒருங்கிணைந்த தரவு தளத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்யலாம்
திருச்சி
மாநில செய்திகள்

தேசிய அளவிலான ஒருங்கிணைந்த தரவு தளத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்யலாம்

தினத்தந்தி
|
8 July 2022 2:44 AM IST

தேசிய அளவிலான ஒருங்கிணைந்த தரவு தளத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்யலாம்.

ஒருங்கிணைந்த தரவு தளம்

தேசிய அளவிலான ஒருங்கிணைந்த தரவு தளமான e-Shram Portal-ல் அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவுசெய்யலாம். இதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள eshram.gov.in என்ற வலைதளத்தின் மூலம் கட்டுமான தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டு பணியாளர்கள், விவசாய தொழிலாளர்கள், தச்சு வேலை, உள்ளூர் கூலி தொழிலாளர்கள், முடிதிருத்துவோர், தெரு வியாபாரிகள், சிறுவியாபாரிகள், அங்கன்வாடி தொழிலாளர்கள், நெசவாளர்கள், மீனவ தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள், தையல் தொழிலாளர்கள், சாயப்பட்டறை, டிரைவர் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் போன்ற பல்வேறு வகையான அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்கள் விவரங்களை நேரடியாகவோ, இ-சேவை மையங்கள் அல்லது பொது சேவை மையங்கள் (CSC) மூலமாகவோ பதிவு செய்யலாம்.

மேலும் மாநில அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களும் இந்த தரவு தளத்தின் கீழ் பதிவு செய்து கொள்ளலாம். இந்த பதிவினை மேற்கொள்ள 18 வயது முதல் 59 வயது வரை உள்ள தொழிலாளர்களாக இருக்க வேண்டும். மேலும் இ.எஸ்.ஐ. மற்றும் பி.எப். பிடித்தம் செய்யக்கூடிய தொழிலாளர்களாகவோ, வருமானவரி செலுத்தக்கூடிய தொழிலாளர்களாகவோ இருக்கக்கூடாது. பதிவு செய்ய எந்தவித கட்டணமும் தேவையில்லை.

பதிவு செய்யலாம்

பதிவுக்கு ஆதார் அட்டை, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்கள் இருக்க வேண்டும். பதிவிற்கு பிறகு 12 இலக்க எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும். இந்த தரவு தளத்தில் தன்னை இணைத்து கொள்ளும் அமைப்பு சாராத தொழிலாளர்களுக்கு பிரதமரின் சுரக்‌ஷா விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படும். இதில் தொழிலாளர்கள் பணி செய்யும் இடங்கள், வசிப்பிடங்கள் மற்றும் வட்டார அளவில் தொழிலாளர் துறை சார்பாக நடத்தப்பட்டு வரும் முகாம்களில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்து பயன்பெறலாம்.

இந்த தகவலை திருச்சி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஏ.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்