பெரம்பலூர்
தெருமுனை பிரசாரம் நடத்த தொழிற்சங்கங்கள் முடிவு
|தெருமுனை பிரசாரம் நடத்த தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளனர்.
மத்திய-மாநில தொழிற்சங்கங்களின் பெரம்பலூர் மாவட்ட மாநாடு துறைமங்கலத்தில் நேற்று நடந்தது. மாநாட்டிற்கு மாவட்ட செயலாளர்கள் ரெங்கசாமி (தொ.மு.ச.) (கவுன்சில்), அகஸ்டின் (சி.ஐ.டி.யு.), மாலிக்பாட்ஷா (எஸ்.டி.யு.), மாவட்ட நிா்வாகிகள் ராஜேந்திரன் (ஏ.ஐ.டி.யு.சி.), நீலமேகம் (எச்.எம்.எஸ்.), ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். சுதந்திர தொழிலாளர் யூனியன் சங்க பொதுச் செயலாளர் சையத் அலி, சி.ஐ.டி.யு. மாநில துணை தலைவர் கருப்பையன் ஆகியோர் மத்திய அரசின் தொழிலாளர், மக்கள், விவசாய விரோத கொள்கைகளை விளக்கமாக பேசினர். தொழிலாளர் சட்ட தொகுப்புகள் நான்கையும் கைவிட வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் இல்லாத குடும்பங்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு (100 நாள் வேலை) நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும். இந்த திட்டத்தை நகரங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். அரசு துறைகளில் ஒப்பந்த முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.பெட்ரோலிய பொருட்களுக்கு மீதான கலால் வரியை குறைத்து அனைத்து பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை கூடுதலாக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி சென்னையில் வருகிற 9-ந்தேதி மத்திய-மாநில தொழிற்சங்கங்கள் சார்பில் பெருந்திரள் அமர்வு நடைபெறவுள்ளது. அதற்கான மக்கள் சந்திப்பு, தெருமுனை பிரசாரம் வருகிற 5, 6-ந்தேதிகளில்பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டது.