பெண்களை வாழ்நாள் முழுவதும் மதிக்க வேண்டும் - மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி பேச்சு
|கோவையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. எழுதிய ‘தடையொன்றுமில்லை’ என்ற புத்தக வெளியிட்டு விழாவில் மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி கலந்துகொண்டார்.
கோவை:
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. எழுதிய தடையொன்றுமில்லை என்ற புத்தகம் வெளியீட்டு விழா கோவையில் நடந்தது. முன்னாள் மத்திய மந்திரிகள் பொன் ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் எச்.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஸ்மிரிதி ராணி கலந்து கொண்டு தடையொன்றுமில்லை என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதை சிறுதுளி அமைப்பு நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன் மற்றும் தொழிலதிபர் ராஜ்குமார், ரமணி சங்கர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பின்னர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேசினார்.
முன்னதாக மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி பேசும்போது கூறியதாவது:-
பெண்கள் கல்வி கற்கும்போது, எந்த தொழிலை மேற்கொள்ள வேண்டும் அல்லது இல்லத்தரசியாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மேலும் பெண்களுக்கு எப்படி அதிகாரம் அளிப்பது என்று மக்கள் அடிக்கடி பேசுகிறார்கள். பெண்கள் மிகவும் முக்கியமானவர்கள். பெண்கள் மகளாக, மனைவியாக, தாயாக இருக்கிறார்கள். எனவே பெண்களை நாம் வாழ்நாள் முழுவதும் மதிக்க வேண்டும்.
மேலும் பெண் குழந்தையை, அது குழந்தையாக இருக்கும்போது எப்படி பார்த்துக்கொள்கிறோமோ அதுபோன்று அந்த குழந்தை வயதான பருவத்துக்கு வரும்போது மீண்டும் அவர்கள் குழந்தைபோன்று மாறிவிடுகிறார்கள். எனவே நாம் அவர்களை வயதாகிவிட்டார்கள் என்று தூக்கி எறியாமல், அவர்களை ஒரு குழந்தை போன்று பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களின் ஆசீர்வாதம் நமக்கு எப்போதும் கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பா.ஜனதா நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர மாவட்ட தலைவர் பாலாஜி உத்தரசாமி நன்றி கூறினார்.