தாய் நாட்டைப் போன்று கடல் தாயையும் பாதுகாப்பது நமது கடமை - மத்திய இணை மந்திரி எல் முருகன்
|சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகரில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தை மத்திய இணை மந்திரி எல் முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை:
பிரதமர் நரேந்திர மோடி பிறந்த தினம் மற்றும் சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் ஆல்காட் மெமோரியல் பள்ளியில் இருந்து நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி டாக்டர் எல் முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்து பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னையை சேர்ந்த சர்வதேச கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனையும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான அனிதா பால்துரை கலந்து கொண்டனர். நிகழ்வில் பேசிய மத்திய இணை மந்திரி,
8 ஆயிரம் கி. மீ. பரந்து விரிந்துள்ள இந்திய கடற்கரையில் எண்ணற்ற வளங்கள் பொதிந்து கிடக்கின்றது. கடலை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் இன்று நடந்து வருகிறது. விளையாட்டை ஊக்குவிக்க பிரதமர் நரேந்திர மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கேலோ இந்தியா, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு விளையாட்டு மைதானம் என்பதை எடுத்துக்காட்டாக கூறலாம் என கூறினார்.
தொடர்ந்து பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற கடற்கரை தூய்மை இயக்கம் நிகழ்வில் கலந்து கொண்ட மத்திய மந்திரி பேசுகையில்,
கொரோனா தொற்று பாதிப்பு இருந்தபோதும், கடல்சார் பொருட்கள் உற்பத்தி அதிகமாகவே இருந்தது. இத்தகைய கடல் அன்னையை தாய் நாட்டை போன்று போற்றி பாதுகாக்க வேண்டும்.
வருங்கால சந்ததியினருக்கு இயற்கை வளங்களை அளிக்க வேண்டும். எனவே கடலை, கடற்கரையை பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. 100வது சுதந்திர தினத்தில் இந்தியா உலகிற்கே வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதை நோக்கி நாம் அனைவரும் உழைக்க வேண்டும் என கூறினார். தொடர்ந்து பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டார்.