தென்மாநிலங்களில் செயல்படும் கிராமப்புற வங்கிகளின் செயல்பாடு குறித்து மத்திய நிதி மந்திரி ஆய்வு
|தென்மாநிலங்களில் செயல்படும் கிராமப்புற வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து சென்னையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார்.
கிராமப்புற வங்கிகள்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று சென்னை வந்தார். சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்படும் கிராமப்புற வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து இம்மாநிலங்களின் நிதித்துறை உயர் அதிகாரிகள் மற்றும் வங்கி தலைவர்கள், மூத்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் மத்திய அரசின் நிதி சேவைகள் துறை செயலாளர் விவேக் ஜோஷி, தமிழக நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் மற்றும் ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரிகளும், பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நபார்டு வங்கி ஆகியவற்றின் நிர்வாக இயக்குனர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில் கிராமப்புற வங்கிகளின் நிதி நிர்வாகம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
அதிக கவனம் செலுத்த வேண்டும்
கிராமப்புற வங்கிகள் மத்திய அரசின் விவசாயிகள் மற்றும் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகளின் விகிதத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.
கிராமப்புற வங்கிகளில் தொழில்நுட்பத்தை மேம்படுத்த விரைந்து நடவடிக்கை எடுத்து டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி செல்லும் மத்திய அரசின் முயற்சிக்கு துணையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
புதுமையான திட்டங்கள்
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறந்த முறையில் சேவை செய்ய புதுமையான திட்டங்களை உருவாக்கவும், அந்தந்த மாநில அரசின் அதிகாரிகளுடன் இணைந்து கிராமப்புற வங்கிகள் அதிகாரிகள் செயல்படவும் கேட்டுக்கொண்டார்.
பிரதமரின் தற்சார்பு நிதி திட்டத்தின் கீழ் தெருவோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவது போன்று மீன்பிடி தொழில், கால்நடை வளர்ப்பு போன்றவற்றுக்கும் கடன் வழங்க வேண்டும் என்றார்.