அனைத்து மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து விரைவில் தேசிய கல்விக்கொள்கை - மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான்
|அனைத்து மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து விரைவில் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
தேசிய கல்விக்கொள்கை
மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று கோவை வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அனைத்து மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து தேசிய கல்விக் கொள்கையை விரைவாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக நிதிநிலை அறிக்கையில் நிதிஒதுக்கீடு செய்யப்படும். தேசிய கல்விக் கொள்கை மட்டுமின்றி தற்போது மத்திய அரசின் பல்வேறு கல்வி திட்டங்களை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. நான்கு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் பாடத்திட்டங்களை பொறுத்தவரை புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட சில ஆண்டுகளுக்கு பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுப்பதில் மாணவ-மாணவிகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படும்.
செயல் திறன் கண்டுபிடிப்பு
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு இதுவரை இந்தி, ஆங்கிலம், உருது உள்ளிட்ட மொழிகளில் மட்டும் புத்தகங்கள் அச்சிட்டு வெளியீடு செய்து வந்த சூழலில் இந்த ஆண்டு முதல் தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் புத்தகங்கள் அச்சிட்டு வெளியிடப்பட உள்ளது. பல்கலைக்கழக மானிய குழுவில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் விரைவில் புதிய கல்விக்கொள்கையில் பல்கலைக்கழக மானியக்குழு மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தரத்திற்கும், கல்வி நிறுவனங்கள் அதிகரிப்பிற்கும் தொடர்பு இல்லை. செல்போன் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பத்துறைகளில் ஓ.எஸ். என்று கூறப்படும் ஆபரேடிங் சிஸ்டம் தொழில்நுட்பத்துக்கு வெளிநாடுகளை நம்பி இருந்தோம். தற்போது இந்தியாவிலேயே செயல்திறன் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற முன்னேற்றங்களுக்கு கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும் ஒரு காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோரிக்கை மனு
அப்போது அவரிடம் பா.ஜ.க. மாவட்ட இளைஞர் அணி சார்பில் தேசிய கல்வி கொள்கை-2020-ஐ தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும், தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் மாணவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்திட அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் அமைத்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.