< Back
மாநில செய்திகள்
மூத்த குடிமக்களுக்கான பயண கட்டண சலுகை மீண்டும் வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்யும்-மத்திய ரெயில்வே இணை மந்திரி தகவல்
கரூர்
மாநில செய்திகள்

மூத்த குடிமக்களுக்கான பயண கட்டண சலுகை மீண்டும் வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்யும்-மத்திய ரெயில்வே இணை மந்திரி தகவல்

தினத்தந்தி
|
1 March 2023 12:27 AM IST

கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட மூத்த குடிமக்களுக்கான பயண கட்டண சலுகை மீண்டும் வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்யும் என மத்திய ரெயில்வே இணை மந்திரி தர்ஷனா ஜர்தோஸ் கூறினார்.

கரூர் ரெயில் நிலையத்தில் ஆய்வு

கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய ரெயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை மந்திரி தர்ஷனா ஜர்தோஸ் நேற்று முன்தினம் வருகை புரிந்தார். முன்னதாக அவர் கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனை தொடர்ந்து கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு கரூர் ரெயில்நிலையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரெயில்நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதையடுத்து, கரூர் ரெயில் நிலையத்தில் உள்ள மருத்துவ உதவி சிகிச்சை மையத்தையும், ரெயில்நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு ரெயில் நிலையம் ஒரு பொருள் விற்பனை நிலையத்தையும் ஆய்வு செய்து அந்த நிலையத்தில் சூப் அருந்தினார். தொடர்ந்து பயணிகள் ஓய்வறையையும், கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர் ரெயில் நிலையத்தில் உள்ள டீக்கடையில் டீ அருந்தி அதற்கான தொகையை பே.டி.எம். மூலம் செலுத்தினார்.

கரூர்-சென்னை விரைவு ரெயில்

இதையடுத்து, மத்திய இணை மந்திரி தர்ஷனா ஜர்தோஸ் நிருபர்களிடம் கூறியதாவது:- வந்தே பாரத் திட்டத்தில் மேலும் புதிய ரெயில்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் நாடு முழுவதும் 100 ரெயில்நிலையங்களை மேம்படுத்த உள்ளோம். அதில் கரூர் ரெயில் நிலையமும் ஒன்று. கரூர் வணிகர்களின் கோரிக்கையை ஏற்று கரூர்-சென்னை விரைவு ரெயில் இயக்க பரிசீலிக்கப்படும். கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட மூத்த குடிமக்களுக்கான பயண கட்டண சலுகை மீண்டும் வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, சேலம் கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாஸ், கூடுதல் கோட்ட மேலாளர் சிவலிங்கம் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்