< Back
மாநில செய்திகள்
சீர்காழியில் இன்று இரவுக்குள் சீரான மின் விநியோகம் - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
மாநில செய்திகள்

சீர்காழியில் இன்று இரவுக்குள் சீரான மின் விநியோகம் - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

தினத்தந்தி
|
13 Nov 2022 9:36 AM GMT

சீர்காழியில் இன்று இரவுக்குள் சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ஆய்வு செய்த பின், அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

சீர்காழி,

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சீர்காழி பகுதியில் திரும்பிய திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கிட்டத்தட்ட சீர்காழி பகுதியே தனித் தீவு போல் காட்சியளித்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், திருமுல்லைவாசல், சூரைக்காடு, கொள்ளிடம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மிக அதிக கனமழை பெய்தது. இதில் சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் குறிப்பாக 6 மணி நேரத்தில் 44 செ.மீ மழை கொட்டி தீர்த்தது.

இந்தநிலையில், சீர்காழியில் எடமணல் துணை மின் நிலையத்தை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சீர்காழி உள்ளிட்ட நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்றிரவுக்குள் மின்விநியோகத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிந்த பகுதிகளில் மின்விநியோகம் வழங்கப்படும். சேதமடைந்த மின்மாற்றிகளை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

50 ஆயிரம் பணியிடங்கள் மின் வாரியத்தில் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கு நிதித்துறையின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்த உடன் பணிகள் தொடங்கும். இந்த மாவட்டங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 ஆயிரம் மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளன. 400 மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. 600 சாய்ந்த மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன.

மின் மாற்றிகளை மாற்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் எந்த வித பணமும் வசூலிப்பது இல்லை. எந்த புகாராக இருந்தாலும் மின்னகம் மையத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும். பணி செய்யாத மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இன்று (நவ.13) காலை 6 மணிக்கு எங்களை தொடர்பு கொண்டு மீட்புப் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்ய வேண்டிய பணிகள் குறித்த அறிவுறுத்தல்களை வழங்கினார்"

இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

மேலும் செய்திகள்