< Back
மாநில செய்திகள்
பொது சிவில் சட்டம் யாருக்கும் எதிரான சட்டமாக இருக்காது - அண்ணாமலை பேட்டி
மாநில செய்திகள்

'பொது சிவில் சட்டம் யாருக்கும் எதிரான சட்டமாக இருக்காது' - அண்ணாமலை பேட்டி

தினத்தந்தி
|
5 July 2023 7:39 PM IST

அனைத்து கட்சிகளும் இணைந்து பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

விழுப்புரம்,

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் அண்மையில் பா.ஜ.க. நிர்வாகிகளுக்கான பயிற்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இருவிதமான சட்டங்களால் நாட்டு நிர்வாகத்தை நடத்த முடியாது. நாட்டு மக்கள் அனைவரும் சமம் என அரசியல் சாசனம் கூறுவதால், நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம். ஆனால், பொது சிவில் சட்ட விவகாரத்தில் சிலர் தவறான கருத்துகளை பரப்பி, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்" என்று தெரிவித்திருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பேச்சுக்கு, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே 22-வது இந்திய சட்ட ஆணையம், நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது குறித்து மத அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கோரி உள்ளது.

இந்த நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பொது சிவில் சட்டம் குறித்து பேசிய அவர், "பொது சிவில் சட்டம் என்பது இஸ்லாமியர்களுக்கும், குறிப்பாக இஸ்லாமிய பெண்களுக்கும் நல்ல சட்டம். அதே போல் கிறிஸ்தவர்களுக்கும் அது நல்ல சட்டம். யாருக்கும் எதிரான சட்டமாக பொது சிவில் சட்டம் இருக்கப்போவது கிடையாது.

எனவே வருகின்ற காலங்களில் எதிர்கட்சிகளின் நிலைப்பாடு மாறும் என நம்புகிறேன். கட்சிகளுக்கு இடையில் இருமொழிக் கொள்கை, மும்மொழிக் கொள்கை, நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்டவற்றில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அதை எல்லாம் கடந்து நாம் பயணம் செய்ய வேண்டும். எங்களைப் பொறுத்தவரை அனைத்து கட்சிகளும் இணைந்து பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்" என்று அண்ணாமலை தெரிவித்தார்.


மேலும் செய்திகள்