< Back
மாநில செய்திகள்
பொது சிவில் சட்டம் ஒரு மதத்திற்கு எதிரானது அல்ல - தமிழிசை சவுந்தரராஜன்
மாநில செய்திகள்

'பொது சிவில் சட்டம் ஒரு மதத்திற்கு எதிரானது அல்ல' - தமிழிசை சவுந்தரராஜன்

தினத்தந்தி
|
5 July 2023 6:10 PM IST

பொது சிவில் சட்டத்தின் உண்மையை புரிந்து கொண்டு எதிர்கட்சியினரே ஆதரிக்கத் தொடங்கி இருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

நெல்லை,

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் அண்மையில் பா.ஜ.க. நிர்வாகிகளுக்கான பயிற்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இருவிதமான சட்டங்களால் நாட்டு நிர்வாகத்தை நடத்த முடியாது. நாட்டு மக்கள் அனைவரும் சமம் என அரசியல் சாசனம் கூறுவதால், நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம். ஆனால், பொது சிவில் சட்ட விவகாரத்தில் சிலர் தவறான கருத்துகளை பரப்பி, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்" என்று தெரிவித்திருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பேச்சுக்கு, எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே 22-வது இந்திய சட்ட ஆணையம், நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது குறித்து மத அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கோரி உள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பொது சிவில் சட்டம் குறித்து பேசிய அவர், "ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்தால், 4 பேருக்கும் தனித்தனி சட்டங்கள் இருக்க முடியாது, அனைவருக்கும் ஒரே சட்டம் தான் இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பொது சிவில் சட்டம் ஒரு மதத்திற்கு எதிரானது என்பதைப் போன்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் அது அப்படி அல்ல. இந்த சட்டத்தின் உண்மையை புரிந்து கொண்டு எதிர்கட்சியில் இருப்பவர்களே இதை ஆதரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவல் இந்த சட்டத்தை ஆதரித்துள்ளார். சரத் பவார் கூட இதைப் பற்றி நாம் விமர்சனம் செய்ய வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

எனவே பொது சிவில் சட்டம் இன்றைய காலகட்டத்திற்கு அவசியமானது என்பதைத் தான் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சிலர் அதை தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர்" என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.



மேலும் செய்திகள்