< Back
மாநில செய்திகள்
பொது சிவில் சட்டம் நாட்டின் பன்முகத் தன்மைக்கு எதிரானது - சட்ட ஆணையத்திற்கு வைகோ கடிதம்
மாநில செய்திகள்

'பொது சிவில் சட்டம் நாட்டின் பன்முகத் தன்மைக்கு எதிரானது' - சட்ட ஆணையத்திற்கு வைகோ கடிதம்

தினத்தந்தி
|
15 July 2023 5:24 PM IST

அரசியலமைப்புச் சீர்குலைவை பொது சிவில் சட்டம் ஏற்படுத்தும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை,

பொது சிவில் சட்டம் நாட்டின் பன்முக தன்மைக்கு எதிரானது என்றும், அதனை அமல்படுத்தக்கூடாது என்றும் வலியுறுத்தி இந்திய சட்ட ஆணையத்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது;-

"இந்தியாவில் குற்றவியல் சட்டங்களும், தண்டனைச் சட்டங்களும் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால் உரிமையியல் சட்டங்கள் எனப்படும் சிவில் சட்டங்கள் மட்டும் சாதி, மத, இன ரீதியாக கலாசாரத்திற்கேற்ப மாறுபடும், முஸ்லிம்கள் மட்டுமல்ல, சீக்கியர்கள், ஜெயின்கள் என்று ஒருவர் சார்ந்துள்ள மதத்திற்கேற்ப சிவில் சட்டங்கள் மாறுபடுகின்றன.

இந்து மதத்திலும் இந்துக்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தால் வரிச்சலுகைகள் உண்டு. இந்துக்கள் குழந்தைகளைத் தத்தெடுக்கவும், ஜீவனாம்சம் பெறவும் தனி சட்டங்கள் உண்டு. பொது சிவில் சட்டம் தனிநபர் உரிமையான எந்த மதத்தையும் பின்பற்றுதல், வாரிசுரிமை, தத்தெடுத்தல் போன்றவற்றில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 25 வழங்கியுள்ள உரிமைகளைப் பறிப்பதற்கும், பிரிவு-29 வழங்கியுள்ள சிறுபான்மையினருக்கான உரிமைகளைப் பறிப்பதற்குமான முயற்சியாகும்.

பொது சிவில் சட்டத்தை திணிப்பதற்கான எந்தவொரு முயற்சியும் மத விஷயங்களில் அரசின் முரண்பாடாக கருதப்படலாம், மேலும் பல்வேறு மத சமூகங்களுக்கிடையில் ஆழமான பிளவுகளையும் சமூக அமைதியின்மையையும் உருவாக்கும் முயற்சியாகவும் கருதப்படும். அரசியலமைப்புச் சீர் குலைவை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பன்முக தன்மைக்கு எதிரான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது."

இவ்வாறு வைகோ தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்