திருமணமாகியும் மறக்க முடியாத காதல்... கணவரை பிரிந்து வாலிபருடன் வாழ்ந்த இளம்பெண்.. அடுத்து நடந்த கோர சம்பவம்
|கவுதம் மற்றும் பிரியா இருவரும் காதலை மறக்க முடியாமல் தவித்து வந்தனர்.
சென்னை,
சென்னை சைதாப்பேட்டை, ஸ்ரீராம்பேட்டை தெருவை சேர்ந்தவர் கவுதம் (வயது 25). இவரது மனைவி பிரியா (23). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு வீட்டில் கவுதம் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருந்தார். அப்போது வீட்டின் கதவை யாரோ பலமாக தட்டும் சத்தம் கேட்டது. கவுதம் ஜன்னல் வழியாக பார்த்தபோது, வீட்டின் வெளியே கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 6 பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் கவுதம், கதவை திறக்காமல் பயத்தில் வீட்டின் உள்ளேயே இருந்தார். நீண்ட நேரமாக கதவை தட்டி பார்த்தும் திறக்காததால் அந்த கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தது. இதனால் கவுதமும், அவரது மனைவி பிரியாவும் அதிர்ச்சியில் உறைந்து போனாா்கள்.
உடனே கவுதம், அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க வீட்டின் உள்ளே ஓடினார். ஆனால் அவரை மடக்கி பிடித்த அந்த கும்பல் அரிவாள், கத்தியால் சரமாரியாக வெட்டினர். தனது கண்ணெதிரே கணவர் வெட்டப்படுவதை அறிந்த பிரியா, வீட்டின் வெளியே சென்று கத்தி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. பலத்த வெட்டு காயம் அடைந்த கவுதம், தனது மனைவி, குழந்தைகள் கண் எதிரேயே துடி துடித்து உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையிலான சைதாப்பேட்டை போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று கொலையான கவுதம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுதம் மனைவி பிரியாவிடம் விசாரணை நடத்தினர். அதில் தனது முன்னாள் கணவர் ராஜ்கிரண்தான், கவுதமை கொலை செய்ததாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக பிரதீப் என்ற குள்ளு (26), சுரேஷ் (27), ராஜா என்ற ராஜாபாய் (28) ஆகிய 3 பேரும் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்களை தேனாம்பேட்டை போலீசார் சைதாப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். 3 பேரிடமும் நடத்திய விசாரணையில் பிரியாவின் முன்னாள் கணவர் ராஜ்கிரண் (31), சுகுமார் (26), மணி (26) ஆகியோருடன் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
கொலையான கவுதம் மற்றும் பிரியா இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரியாவின் பெற்றோர், 6 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்கிரணுக்கு பிரியாவை திருமணம் செய்து வைத்தனர். அதன்பிறகு அவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்தன.
ஆனாலும் கவுதம் மற்றும் பிரியா இருவரும் தங்கள் பழைய காதலை மறக்க முடியாமல் தவித்து வந்தனர். இதனால் பிரியா, கணவர் ராஜ்கிரணிடம் இருந்து பிரிந்து தனது குழந்தைகளுடன் காதலன் கவுதமுடன் சென்று கணவன்-மனைவி போல் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
ராஜ்கிரண் அவர்களுக்கு தொடர்ந்து இடையூறு செய்து வந்ததால் கடந்த செப்டம்பர் மாதம் கவுதம் மற்றும் பிரியா இருவரும் கொரட்டூர் பகுதியில் வைத்து ராஜ்கிரணை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதுதொடர்பாக கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் சிறையில் அடைத்தனர். பின்னர் சிறையில் இருந்து வெளியில் வந்த 2 பேரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
தனது மனைவி மற்றும் குழந்தைகளை அபகரித்துக்கொண்டு கவுதம் குடும்பம் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாத ராஜ்கிரண், தனது நண்பர்களுடன் சேர்ந்து வீடு புகுந்து கவுதமை வெட்டி கொலை செய்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரியாவின் முன்னாள் கணவர் ராஜ்கிரண், அவரது நண்பர்கள் சுகுமார், மணி ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.