திருநெல்வேலி
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
|வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.
நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200-ம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600-ம் வீதம் 3 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குக்கு வரவு வைக்கப்படும்.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பதிவு செய்து இருக்க வேண்டும். அதே நேரத்தில் அதனை புதுப்பித்து இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினர் 45 வயதுக்கு மிகாமலும், பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., ஓ.சி. பிரிவினர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1 வருடம் முடிந்து இருக்க வேண்டும்.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தகுதி உள்ளவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் அலுவலக வேலை நாட்களில் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து அதற்கான விண்ணப்பத்தை பெற்று கொள்ளலாம். அல்லது ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் வருவாய்த்துறை சான்றிழ் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் முத்திரையுடன் கூடிய கையொப்பம் பெற்று, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அசல் கல்வி சான்றிதழ், சாதிச்சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், வங்கி கணக்கு புத்தக நகல் உள்ளிட்டவற்றை இணைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.