< Back
மாநில செய்திகள்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தினத்தந்தி
|
10 Oct 2023 12:20 AM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உதவித்தொகை

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 10-ம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டிற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மற்றும் ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.

மாற்றுத்திறனாளிகள்

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10-ம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் அதற்கும் கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600-ம், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரு.1,000 வீதம் 10 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த ஒரு திட்டத்திலும் உதவித்தொகை பெறுபவராக இருக்கக் கூடாது.

இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதிகள் உள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்து கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் ஆண்டு முழுவதும் வழங்கப்படும். மேலும் இந்த உதவித்தொகை பெறுபவர்களின் அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது எனவும,் இந்த உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது.

இவ்வாறு அதில் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்