< Back
மாநில செய்திகள்
ஈரோட்டில் முடியாத பாதாள சாக்கடை பணிகள்; புழுதி பறக்கும் சாலைகளால் பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்- நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோட்டில் முடியாத பாதாள சாக்கடை பணிகள்; புழுதி பறக்கும் சாலைகளால் பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்- நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தினத்தந்தி
|
28 Aug 2023 4:13 AM IST

ஈரோட்டில் முடியாத பாதாள சாக்கடை பணிகள்; புழுதி பறக்கும் சாலைகளால் பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்- நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் சாலைகள் அமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை சாலை வசதி இல்லாத பல பகுதிகளில் புதிதாக சாலை அமைக்கப்பட்டு, தார் போடும் பணிகளும் நடந்து வருகின்றன. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே தார் ரோடு போடப்பட்டு, பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சில சாலைகள் கண்டுகொள்ளப்படாமல் உள்ளன. இதுபோல் தார் உடைந்து ஜல்லிகள் பெயர்ந்த சில சாலைகளும் மீண்டும் செப்பனிடப்படாமல் கிடக்கின்றன. இதனால் தற்போது புழுதி பறக்கும் சாலைகளாக இவை மாறி உள்ளன.

புழுதி மண்டலம்

மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகள் பழுதடைந்து காணப்படுகிறது. குறிப்பாக சுவஸ்திக் கார்னர் ரவுண்டானா பகுதியில் சாலை செப்பனிடப்பட்டு உள்ளது. அங்கு வாகனங்கள் செல்லும்போது புழுதி மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பரிதவிக்கிறார்கள். இதேபோல் ஈரோடு காந்திஜிரோட்டில் உள்ள அம்மா உணவகம் முன்பு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக ஓடுகிறது. இதனால் நடுரோட்டில் பள்ளம் ஏற்பட்டது. அந்த வழியாக நேற்று சென்ற வாகன ஓட்டிகள் 3 பேர் தவறி விழுந்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகளுக்கு பள்ளம் இருப்பதை எச்சரிக்கை செய்யும் வகையில் பேரிகார்டரை அமைத்தனர்.

சூரம்பட்டி அணைக்கட்டு அருகே உள்ள சங்கம்துறை பகுதியில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக தோண்டப்பட்ட சாலை 10 ஆண்டுகளுக்கும் மேலாக சரி செய்யப்படாமல் உள்ளது.

இதுபோல் ஈரோடு கொல்லம்பாளையம் ஜீவானந்தம்ரோடு பழைய கள்ளிவலசு பகுதியில் உள்ள சாலையும் பல ஆண்டுகளாக ஜல்லிகள் பெயர்ந்து கரடுமுரடாக உள்ளது.

நாடார் மேடு நேரு வீதியில் உள்ள சாலையின் கான்கிரீட் பெயர்ந்து கிடக்கிறது. அதனால் மழைக்காலத்தில் சாக்கடை கழிவுகள் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.

சென்னிமலைரோடு, ஈ.வி.என்.ரோடு சந்திக்கும் பகுதியில் புதிதாக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. அந்த பணிகள் முடிந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் சாலை சீரமைக்கப்படவில்லை. அபாயகரமான பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.

மேலும், பல்வேறு முக்கிய சாலைகளில் ஆங்காங்கே சிறு, சிறு பள்ளம் இருப்பதால் வேகமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைந்தனர்.

இதுகுறித்து பொதுமக்களின் கருத்து வருமாறு:-

சேறும், சகதி

சூரம்பட்டி சங்கம்துறையை சேர்ந்த ஷாகிதா பேகம் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடைக்காக குழி தோண்டப்பட்டது. அதன்பிறகு சாலை சீரமைக்கப்படவில்லை. மழை பெய்யும்போது சேறும், சகதியுமாக இருப்பதால் நடப்பதற்கே சிரமம் ஏற்படும். பள்ளிக்கூடத்துக்கு மாணவ-மாணவிகள் சகதியில் மிதித்து நடக்க வேண்டியுள்ளது. எனவே அங்கு தார் சாலை அமைத்து கொடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புறக்கணிப்பு

சூரம்பட்டி சங்கம்துறையை சேர்ந்த நீலவேணி கூறியதாவது:-

எங்கள் வீதியில் அடிப்படை வசதி நிறைவேற்றப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது. தார் சாலை பல ஆண்டுகளாக போடப்படாமல் உள்ளது. மாநகரில் பல்வேறு இடங்களில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் எங்கள் பகுதியில் மட்டும் புதிய சாலை அமைக்கப்படவில்லை. சாக்கடை வசதியும் கிடையாது.

இதுகுறித்து ஏற்கனவே புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. எனவே எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

துர்நாற்றம்

ஈரோடு நாடார்மேடு நேருவீதியை சேர்ந்த இல்லத்தரசி அலீமா பீவி கூறியதாவது:-

எங்கள் வீதியில் உள்ள குறைகளை சரிசெய்ய பல முறை புகார் தெரிவித்து வருகிறோம். சாக்கடை பெரும் பிரச்சினையாக உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவித்தால், ரோட்டில் வளர்ந்து உள்ள செடிகளை மட்டும் வெட்டிவிட்டு செல்கிறார்கள். சாலையை சீரமைக்கவோ, சாக்கடையை உயர்த்தி கட்டி, வீடுகளுக்குள் கழிவுநீர் செல்வதையோ தடுக்க அதிகாரிகள், கவுன்சிலர் யாரும் முன்வரவில்லை. கேட்டால் எங்கள் பகுதியில் ஓட்டுகள் குறைவாக இருப்பதால் உடனடியாக செய்து தர முடியாது என்று கூறுகிறார்கள். இதனால் தினமும் துர்நாற்றத்திலும், கொசு தொல்லையிலும் வாழ்ந்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்